கோலா லங்காட்: புதிய ஆண்டு பிறந்ததும் முதல் இரு நாள்களில் பொது இடங்களில் குப்பை போட்டதற்காக மலேசியாவில் பிடிபட்ட 120 பேரில் மூவர் சிங்கப்பூரர்கள்.
அவர்கள் அனைவருக்கும் 2,000 ரிங்கிட் (S$630) அபராதத்துடன் சமூக சேவையும் தண்டனையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவின் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் இங்கா கோர் மிங் இத்தகவலைக் கூறியுள்ளார்.
அந்தக் குற்றத்தை புரிந்தோரில் 86 மலேசியர்களுடன் 34 சுற்றுப்பயணிகளும் அடங்குவதாக அவர் கூறினார்.
“சிங்கப்பூரைவிட சுத்தமான நாடாக மலேசியாவை வைத்திருக்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்த அவர், மூன்று சிங்கப்பூரர்களும் ஜோகூர் பாருவில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 5) பிடிபட்டதாகக் கூறினார்.
சென்ற ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் குப்பை போடுபவர்களுக்கு எதிராக 1,000க்கு அதிகமான அமலாக்க நடவடிக்கைகளை ஜோகூர் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. குப்பை போட்ட குற்றத்திற்காக அவர்களிடமிருந்து 161,500 ரிங்கிட் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஜோகூர் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் குப்பை போடுவதற்கு எதிரான சில சட்டங்களை இயக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
தற்போதைய சட்டங்கள் குறித்து மறுஆய்வு செய்யவும் மாநிலத்தில் எவ்வாறு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக ஜோகூர் மாநில வீடமைப்பு மற்றும் அரசாங்க மன்றத்தின் தலைவர் முகம்மது ஜாப்னி சுக்கோர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், பொது இடங்கள், ஆற்றுப் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்,” என்றார் அவர்.
பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகையைப் பலமடங்கு உயர்த்தவும் ஜோகூர் அரசாங்கம் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

