மாணவியின் கொலை தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது

மாணவியின் கொலை தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது

படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Oct 2026 - 2:55 pm

2 mins read

பத்து பகாட்: சனிக்கிழமையன்று (அக்டோபர் 3) அன்று யோங் பெங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட, நான்காம் வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக, மலேசியக் காவல்துறையினர் மூன்று ஆண் மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

16 வயதான ஐரீன் சோஃபியா முகமது கைருல் ஃபைசல் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி, மாலை 5.30 மணியளவில் பள்ளி மண்டபத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக ‘சினார் ஹரியான்’ எனும் மலாய் மொழி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி பயின்ற அதே பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய அந்த மூன்று சந்தேக நபர்களையும், சடலம் கண்டெடுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடரும் புலனாய்வுக்கு உதவும் வகையில், சந்தேக நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) காலை பத்து பகாட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவரைக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி துணைப்பாட வகுப்பில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிக்குச் சென்றிருந்தார்.

நண்பர் ஒருவர் மதிய வேளையில் சிறுமி வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டுத் தொடர்புகொண்ட பின்னரே, அவர் காணாமல் போனதை அவரது பாட்டி அறிந்துகொண்டதாகத் தெரியவருகிறது.

சிறுமி வீட்டில் இல்லை என்பதை அறிந்ததும், பாட்டி உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து சென்று, அங்குள்ள மண்டபத்தில் அந்தச் சிறுமி தரையில் பலவீனமான நிலையில் கிடப்பதைக் கண்டார்.

அந்தச் சிறுமியின் உடலில் காய்ந்த ரத்தமும், தாக்குதலுக்கான காயங்களும் காணப்பட்டன.

அவரது தாயின் மறைவுக்குப் பிறகு அவர் தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், அவரது தந்தை கோலாலம்பூரில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநிலக் கல்வித் துறைக்கும் பத்து பகாட் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் ஜோகூர் மாநில அரசு உத்தரவிட்டது.

மாணவர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதை வலியுறுத்திய மாநிலக் கல்வி, தகவல் குழுவின் தலைவர் முகமது நகிப் முகமது கசாலி, நிர்வாகம் இச்சம்பவத்தை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது என்று தெரிவித்ததாக ‘த ஸ்டார்’ ஊடகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
மாணவிகல்விபள்ளி