தோக்கியோ: ஜப்பானின் வடக்கு, மேற்கு நகரங்கள் வரலாறு காணாத பனிப்பொழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பனியை அகற்ற செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) ராணுவப் படையினரும் பனியை அகற்றும் ஊழியர்களும் போராடினர். குளிர்காலப் புயல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே அதிக பனிப்பொழிவு தொடர்ந்து இருக்கும் ஜப்பான் குளிர்கால விளையாட்டுகளுக்கான சிறந்த இடமாக விளங்குகிறது. ஆனால் இந்த ஆண்டின் கடுமையான சூழ்நிலை ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை குறைக்கக்கூடும்.
அமோரி நகரில் நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கிட்டத்தட்ட 2 மீட்டர் உயரத்துக்குப் படிந்துள்ள பனியை அகற்ற போராடும் அதிகாரிகளுக்கு உதவ தற்காப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
ஹொக்கைடோ வட்டாரத்தின் மிகப்பெரிய நகரமான சப்போரோவில் சுமார் 1,000 பனிச்சரிவு இயந்திரங்கள் 3,800 கி.மீ. சாலைகளில் இருந்து பனியை அகற்றும் முயற்சியைத் தொடங்கியதாக நிப்பான் டிவி தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவால் கடந்த வாரம் ஹொக்கைடோவின் முக்கிய விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். ரயில் சேவைகள் தாமதமாகின. சில நெடுஞ்சாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜனவரி 20 முதல் பனி தொடர்பான சம்பவங்களில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மரணங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதை அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை. ஆனால் மக்கள் குன்றுபோல் குவிந்துள்ள பனியை அகற்ற முயன்றபோது கூரைகளில் இருந்து விழுந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

