தோக்கியோ: ஜப்பானில் வாழும் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டோர் தங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று கருதுவதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிடப்பட்ட அரசாங்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அத்தகைய ஆய்வுத் தரவுகள் 2002ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகின்றன. அவற்றில் இவ்வாண்டு வெளிவந்த குழந்தைகள் பெற விரும்பாதோர் எண்ணிக்கை ஆக அதிகமானது என்று கூறப்படுகிறது.
ஆய்வு முடிவுகள் ஏற்கெனவே குறைந்துவரும் ஜப்பானின் பிறப்பு விகிதம் மேலும் பாதிக்கப்படும் என்பதைக் காட்டுவதால் பலரும் கவலைகொண்டுள்ளனர்.
ஜப்பானின் தேசிய மக்கள் தொகை சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் நடத்திய அந்த ஆய்வில் குழந்தைகளைப் பெற விரும்பும் ஆண்கள் 1.3 விழுக்காடு எனவும் பெண்கள் 1.36 விழுக்காடு எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அவ்விரண்டும் மிகக் குறைவான விகிதங்கள்.
திருமணம் ஆகாத ஆண்களில் 33 விழுக்காட்டினர் அவர்களுக்கு பிள்ளைகள் வேண்டாம் என்றனர். அதே எண்ணத்தை 32.4 விழுக்காட்டுப் பெண்களும் கொண்டிருந்தனர். அது 2021ஆம் ஆண்டில் நடந்த ஆய்வுடன் ஒப்பிடுகையில் ஆண்களில் 9.8 விழுக்காடும் பெண்களில் 8.8 விழுக்காடும் அதிகம் என அறியப்படுகிறது.
முந்தைய ஆய்வில் குழந்தைகளைப் பெற விரும்பிய ஆண்,பெண் இருபாலினத்தவரின் சராசரி எண்ணிக்கை 1.56 விழுக்காடாக இருந்தது.
வாழ்க்கைமுறை, விழுமியங்கள், நிதிக் கோட்பாடுகள் போன்றவை இளையோர்கள் குழந்தைகளைத் தவிர்க்கும் தற்போதைய மனநிலைக்குக் காரணங்களாக அமையலாம் என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறினார்.
குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய ஜப்பானிய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டும் ஆய்வின் முடிவுகள் இவ்வாறு வந்துள்ளன.
அந்நாட்டின் பிறப்பு விகிதம் 1973ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்தபோது அந்த ஆண்டில் மட்டும் 2.09 மில்லியன் குழந்தைகள் பிறந்தன. 2025ல் ஜப்பானில் 671, 236 குழந்தைகளே பிறந்தன. அதிகாரபூர்வ தரவுகள் 1899ஆம் ஆண்டிலிருந்து பதிவிடப்பட்டதில் கடந்த ஆண்டில்தான் ஆகக் குறைவான அளவில் அங்கு குழந்தைகள் பிறந்தன.

