கௌகாத்தி: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கடுமையான பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் குறைந்தது 30 பேர் மாண்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) தெரிவித்தனர்.
மாநிலப் பேரிடர் நிர்வாக அதிகாரிகள், அசாமில் எட்டுப் பேரும் அருணாசல பிரதேசத்தில் ஒன்பது பேரும் மாண்டதாகக் கூறினர். பள்ளாத்தாக்கில் பாய்ந்த தண்ணீரால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பலர் பலியாயினர்.
அண்டை மாநிலமான மிசோரமில் ஐவர் நிலச்சரிவில் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேகாலயாவில் ஆறு பேரும் நாகலாந்து, திரிபுரா ஆகியவற்றில் குறைந்தது இருவரும் மாண்டனர்.
மூன்று நாள்களுக்கு விடாமல் பெய்த பெருமழையால் அந்த வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கொட்டித் தீர்த்த மழையால் இமயமலையிலிருந்து தொடங்கி பங்ளாதேஷ் வளைகுடா வரை செல்லும் பிரம்மபுத்திரா நதி கரைபுரண்டோடியது.
மணிப்பூர் மாநிலம் முழுதும் நூற்றுக்கணக்கானோரைக் காப்பாற்றியதாக இந்திய ராணுவம் சொன்னது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் உணவு, குடிநீர், மருத்துவப் பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டதாகவும் ராணுவம் குறிப்பிட்டது.
மேகாலாயா மாநில முதலமைச்சர் கொன்ரே கே. சங்மா, நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய இடங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் உச்ச விழிப்பு நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் பருவமழைக் காலத்தின்போது திடீர் வெள்ளங்களிலும் நிலச்சரிவுகளிலும் ஒவ்வோர் ஆண்டும் பலர் உயிரிழக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்தியாவின் பருவமழை கோடைக்கால வெப்பத்தைத் தணிப்பதுடன் நீர்த் தேவையைப் பூர்த்திசெய்கிறது. இருப்பினும் கனத்த மழை காரணமாக மரணங்களும் சேதங்களும் ஏற்படுகின்றன.
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் கடந்த மாதம் இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே பருவமழை வந்தது.