உலகின் ஆக வயதான நாய்க்கு 30 வயதாகிவிட்டது. போபி எனும் அந்நாய் உலகிலேயே அதிக காலம் வாழ்ந்த நாய் என்ற சாதனை படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
முன்னதாக ஸ்பைக் எனும் நாய் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அதற்கு வயது 23. அந்தச் சாதனையை முறியடித்துள்ளது போபி.
போபி வகையைச் சேர்ந்த நாய்கள் சராசரியாக 12லிருந்து 14 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழும்.
போர்ச்சுகலில் வசிக்கும் போபியின் பிறப்பு ஆண்டு 1992 என பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. போபியின் வயதை தனியார் விலங்கு அமைப்பு ஒன்றும் உறுதிசெய்துள்ளது.
போபியின் நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கேட்டபோது, அமைதியான கிராமப்புறச் சூழலே அதற்குக் காரணம் எனக் கூறுகின்றனர் அதன் உரிமையாளர்கள். மேலும், போபி எப்போதுமே உல்லாசமாக சுற்றித்திரிகிறது என்றும் அதை ஒருநாளும் கட்டிப்போட்டதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
சிறுவயதில் போபி துடிப்பாக இருந்தது. மூப்படைந்துவிட்டதால் இப்போது அது நடக்கச் சிரமப்படுவதாக அதன் உரிமையாளர்கள் வருத்தப்படுகின்றனர்.
அதன் உணவுப் பழக்கம் பற்றிக் கேட்டபோது, "நாங்கள் சாப்பிடுவதைதான் போபிக்கும் தருகிறோம்," என்றனர் கடந்த 30 ஆண்டுகளாக போபியை வளர்த்துவருபவர்கள்.

