தென்கொரியாவின் முன்னாள் அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

வடகொரியாவுக்குள் ஆளில்லா வானூர்திகளை அனுப்பிய விவகாரம்

தென்கொரியாவின் முன்னாள் அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

2 mins read
69093804-dc22-4924-baed-b052289ca91a
ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல்(நடு), போர்க்காலச் சூழலைப் பொய்யாய் உருவாக்க முயன்றது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமைந்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் இவ்வாண்டு ஏப்ரலில் வாதாடினர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்குள் ராணுவத்தின் ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதற்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு அவர் சர்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தார். அதற்குப் போலியான ஒரு காரணத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே யூன் அவ்வாறு செய்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஆளில்லா வானூர்திகளில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் வடகொரியாவுக்குள் வீசப்பட்டதாக அந்நாடு குற்றஞ்சாட்டியது. அதனையடுத்து, 2024ஆம் ஆண்டு அக்டோபரில், இருதரப்பு ராணுவங்களுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது.

ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு யூன், போர்க்காலச் சூழலைப் பொய்யாய் உருவாக்க முயன்றது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமைந்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் இவ்வாண்டு ஏப்ரலில் வாதாடினர்.

ஆளில்லா வானூர்திகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக யூனுக்கு “30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது” என்று சோல் மத்திய வட்டார நீதிமன்றத்தின் பேச்சாளர் கூறினார். ஆயினும், அதுகுறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ராணுவச் சட்டப் பிரகடனத்தின்மூலம் தென்கொரிய நாடாளுமன்றத்தை முடக்க முயன்ற குற்றச்சாட்டுக்காக யூனுக்கு இவ்வாண்டு பிப்ரவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு டிசம்பரில் நாட்டுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் ராணுவச் சட்டப் பிரகடனத்தை அவர் அறிவித்தார். அது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ஆனால், ராணுவச் சட்டம் ஆறு மணிநேரமே நீடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரக்கூட்டத்தில் அதற்கு எதிராக வாக்களித்து அதனை ரத்துச் செய்தனர்.

இருப்பினும், யூனின் பிரகடனத்தால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததோடு பங்குச் சந்தையும் ஆட்டங்கண்டது. அமெரிக்காவுக்கு அதுபற்றி முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கப்படாததால் அதனாலும் உடனடியாக எதுவும் செய்யமுடியாமல் போனது.

யூன், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறார். நாட்டின் நலனுக்காகவே ராணுவச் சட்டத்தை அறிவித்ததாக அவர் சொல்கிறார்.

ஆளில்லா வானூர்திகள் தொடர்பான குற்றச்சாட்டை அவரின் வழக்கறிஞர்கள் நிராகரித்தனர். வானூர்திகளை அனுப்ப அவர் ஆணை பிறப்பிக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

குப்பைகள் கொண்ட பலூன்களை எல்லையோரப் பகுதிகளுக்கு வடகொரியா அனுப்பியதற்குப் பதிலடியாகவே அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக யூனின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் அதிபர் யூன் பல வழக்குகளை எதிர்நோக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்