தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனுக்கு எதிரான சண்டையில் 300 வடகொரிய ராணுவ வீரர்கள் மரணம்

2 mins read
dc76e14e-1e21-4cf0-9613-1a549b7eef99
நவீன போர்முறை குறித்து வடகொரிய ராணுவ வீரர்களுக்குக் குறைவான புரிந்துணர்வு உள்ளதை தென்கொரிய வேவு அமைப்பு மேற்கொண்ட பகுப்பாய்வு காட்டியது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: உக்ரேனுக்கு எதிரான ரஷ்யப் போரில் சண்டையிட்டபோது கிட்டத்தட்ட 300 வடகொரிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 2,700 பேர் காயமடைந்ததாகவும் சோலின் வேவு அமைப்பை மேற்கோள்காட்டி தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கியவுக்கு எதிராகச் சண்டையிடும் மாஸ்கோவுக்கு உதவ வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பியதாக முன்னதாக சோல் கூறியிருந்தது. அதற்குக் கைமாறாக பியோங்யாங்கின் ஆயுதங்களுக்கும் துணைகோளத் திட்டங்களுக்கும் ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவி கிடைக்கும் என்றும் அது தெரிவித்தது.

கடந்த வாரயிறுதியில், வடகொரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவரை கியவ் பிடித்ததாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸ்லென்ஸ்கி கூறினார். காயமடைந்த அந்த ராணுவ வீரர்கள் விசாரிக்கப்பட்டதைக் காட்டும் காணொளியை அவர் வெளியிட்டார்.

‘‘ரஷ்யாவில் வடகொரியப் படையினரைப் பணியில் அமர்த்தும் நடவடிக்கை ‘குர்ஸ்க்’ வட்டாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வடகொரியப் படையினரின் எண்ணிக்கை 3,000ஐத் தாண்டிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது,’’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங் குவியுன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர்களில் கிட்டத்தட்ட 300 பேர் மாண்டதாகவும் 2,700 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

‘‘வடகொரிய ராணுவ வீரர்கள் சிறைக் கைதிகளாகப் பிடிபடுவதற்குப் பதிலாக தங்களை மாய்த்துக்கொள்ள வேண்டும்,’’ என்று அவர்களுக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக திரு லீ கூறினார்.

இந்நிலையில், ரஷ்யாவில் பிடிபட்டிருக்கும் உக்ரேனிய வீரர்கள் ஒப்படைக்கப்படுவதற்கு கிம் ஜோங் உன் உதவினால், வடகொரிய ராணுவ வீரர்களை அவரிடம் ஒப்படைக்க உக்ரேன் தயாராக இருப்பதாக திரு ஸலென்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும் அதிகமான வடகொரிய ராணுவ வீரர்கள் உக்ரேனால் பிடிபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்