ஜோகூர் தேர்தல் பிரசார விதிமீறல்கள் தொடர்பாக 305 புகார்கள்

ஜோகூர் தேர்தல் பிரசார விதிமீறல்கள் தொடர்பாக 305 புகார்கள்

2 mins read
e20ae154-fc9a-4947-b175-d52d43308bd4
கிடைக்கப்பெற்ற எல்லாப் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: த ஸ்டார்

புத்ராஜெயா: ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் விதிமீறல்கள் தொடர்பான 305 புகார்களைத் தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.

இது கடந்த வியாழக்கிழமை (ஜூலை 2) வரையிலான நிலவரம்.

உள்ளாட்சி அமைப்புகளால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பிரசாரச் சாதனங்களை வைத்திருந்தது தொடர்பான 140 சம்பவங்களும் அந்தப் புகார்களில் அடங்கும் என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இரவு வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டது.

சாலைகளைப் பயன்படுத்துவோருக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தது தொடர்பாக 90 புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.

அத்துடன், வாக்குப்பதிவு மையங்களுக்கு அருகே 50 மீட்டர் சுற்றளவுக்குள் பிரசாரம் தொடர்பான பொருள்களை வைக்கக்கூடாது என்ற விதியை மீறிய 27 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தேர்தல் பிரசார அமலாக்கக் குழுவின் அதிகார வரம்பிற்குள் பெறப்பட்ட எல்லாவிதமான புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கியுள்ளது.

ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது.

வரும் ஜூலை 10ஆம் தேதி வரை நீடிக்கக்கூடிய பிரசார காலத்தில் விதிமீறல்களையும் குற்றங்களையும் கண்டறிய 56 தேர்தல் பிரசார அமலாக்கக் குழுக்களைத் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றத் தடுப்புச் சட்டத்தை அரசியல் கட்சிகள் பின்பற்றுவதை உறுதிசெய்வதில் அந்தக் குழுக்கள் கவனம் செலுத்தும்.

இதற்கிடையே, பிரசார நடவடிக்கைகள் சுமுகமாகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெறுவதை உறுதிசெய்ய மலேசிய அரசக் காவல்துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஆகியவற்றுடன் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்சட்டமன்றத் தேர்தல்பிரசாரம்