யங்கூன்: பங்ளாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களில் ஏறத்தாழ 309,000 பேர் மியன்மாரின் ரகைன் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியர்கள் என்பதை மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ரகைன் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்த பின்னரே அவர்களின் மறுவாழ்வு நடவடிக்கை தொடங்கப்படும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷ் சமர்ப்பித்த 828,824 பெயர் பட்டியலில் 308,797 பேரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், 4,241 பேர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் மேலும் 113,507 பேரின் விவரங்களை உறுதிப்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகைன் மாநிலத்தில் தன்னாட்சி உரிமை கோரி போராடி வரும் ‘அரகான் ஆர்மி’ என்ற ஆயுதமேந்திய அமைப்புக்கும் மியன்மார் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலே அகதிகளை மீண்டும் அழைத்துக்கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, கடந்த 2017ஆம் ஆண்டில் மியன்மார் பாதுகாப்புப் படையினரின் கடுமையான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து 700,000க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பக்கத்து நாடான பங்ளாதேஷுக்குத் தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


