கொழும்பு: இலங்கை முழுவதும் இந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் வியாழக்கிழமை (நவம்பர் 27) அன்று தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்டங்கள் உள்ள மத்திய மாவட்டமான பதுளையில் பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அங்கு இரவு முழுவதும் நிலச்சரிவுகள் வீடுகள் மீது விழுந்ததில் 16 பேர் உயிருடன் புதைந்தனர் என்று பேரிடர் மேலாண்மை மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள நுவரெலியா மாவட்டத்திலும் இதேபோன்ற முறையில் மேலும் நான்கு பேர் மாண்டனர். மீதமுள்ள மரணங்கள் வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.
நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 400 வீடுகள் சேதமடைந்தன. 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டன.
வானிலை காரணமாக நாடு தழுவிய இறுதியாண்டு பள்ளித் தேர்வுகளை அரசாங்கம் இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
இலங்கை முழுவதும் 100மிமீக்கும் அதிகமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் வடகிழக்கில் சில பகுதிகளில் நவம்பர் 27ஆம் தேதி 250மிமீ மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2024ல் பெய்த கனமழையில் 26 பேர் கொல்லப்பட்டதிலிருந்து இந்த வார வானிலை தொடர்பான உயிரிழப்பு மிக அதிகமாகும். கடந்த டிசம்பரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

