கோலாலம்பூர்: அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளியல் உறவு கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டதால் 312,000க்கு மேற்பட்ட புதிய வேலைகள் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கும் அது முக்கியக் காரணமாக விளங்கியதாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொருளியல் ஆலோசகர் டேவ் வில்லியம்ஸ் கூறினார்.
2021ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நிறுவனங்கள் 200 பில்லியன் ரிங்கிட்டிற்கும் (ஏறத்தாழ 60.7 மில்லியன் வெள்ளி) அதிகமான முதலீடுகளை அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த முதலீடுகளில் 72 விழுக்காடு அமெரிக்காவில் ஆக அதிக வருவாய் ஈட்டும் முன்னணி 500 நிறுவனங்களுக்கான ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் முதலீடாகும்.
இந்த ஆண்டில் மட்டும் (2024) கூகல், மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆரக்கல் ஆகிய நிறுவனங்கள் மலேசியாவில் 16 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டை அறிவித்ததை திரு டேவ் சுட்டினார்.
பெர்னாமாவின் கேள்விக்கு அளித்த பதிலில், “இத்தகைய தரமான முதலீடுகள் மலேசியப் பொருளியலுக்கு ஊக்குவிப்பாக அமைவதுடன் மலேசியர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
முதலீடு தொடர்பான அண்மைய அறிவிப்புகளும் புதிய பெருமுதலீட்டுத் திட்டங்களின் தொடக்கமும் அமெரிக்க நிறுவனங்கள் மலேசியா மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
மலேசியாவின் அதிகத் திறன்வாய்ந்த ஊழியரணி, பரவலாகக் காணப்படும் ஆங்கில மொழிப் புலமை, விநியோகக் கட்டமைப்பு போன்றவற்றால் அமெரிக்க நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக திரு டேவ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (Apec) மாநாட்டில் கலந்துகொண்டபோது பிரதமர் அன்வார் இப்ராகிமும் மலேசியாவின் மற்ற தலைவர்களும் ‘ஏபெக்’ அமைப்பு தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக நீடிப்பதை உறுதிசெய்ததை அவர் சுட்டினார்.
அக்டோபர் 24ஆம் தேதி, மலேசியாவும் அமெரிக்காவும் வர்த்தக, பொருளியல் உறவுகளை மேம்படுத்துவதன் அவசியத்தை ஒப்புக்கொண்டதுடன் வர்த்தகம், வேளாண்மை ஆகிய துறைகளில் கூடுதல் கலந்துரையாடல்களை வரவேற்பதாகக் கூறின.

