ஷா ஆலம்: மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாக மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் இதுவரை $33.9 மில்லியன் (108.3 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3), போக்குவரத்து அமைச்சு, அமலாக்க நிறுவனங்கள், விமான நிலையப் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கெடுத்த கூட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் உசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
“மறுசீரமைப்புச் செய்யப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவாகத் தெரிவிக்க இயலாது. இருப்பினும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள், சரக்குகள் ஆகியவற்றின் போக்குவரத்தில் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்கவேண்டிய அவசியம் உள்ளது,” என்றார் அவர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையப் பாதுகாப்பில் ஆயுதங்கள், கடத்தல் பொருள்கள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தற்போது போதைப்பொருள் தடுப்பையும் அதே உயர்மட்ட முன்னுரிமைப் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் ஓமார் கான் குறிப்பிட்டார்.


