ஜெனீவா: கடந்த 2025ஆம் ஆண்டில் மனிதநேய உதவிப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தது என்று ஐக்கிய நாடுகள் மன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்தது.
ஆயுதம் ஏந்திய ஆளில்லா வானூர்திகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதே இதற்குப் பகுதி காரணம் என்றும், இப்போக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் அது குறிப்பிட்டது.
கனடா, ஆஸ்திரேலியா நிதியுதவியுடன் செயல்படும் ‘உதவிப் பணியாளர் பாதுகாப்புத் தரவுத்தளம்’ வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் உதவிப் பணியாளர்கள் 907 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது கடத்தப்பட்டனர். அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 833ஆக இருந்தது.
அவர்களுள் 350 பேர் கொல்லப்பட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், 2024ல் 387 பேர் கொல்லப்பட்டனர்
இந்த வன்முறைப் போக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், போர் விதிகளை மதிக்குமாறும் குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்யுமாறும் நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
“மற்றவர்களுக்குச் சேவை செய்வது எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தானதாக மாறியுள்ளது,” என்றார் திரு குட்டரெஸ்.
மலிவான, மாற்றியமைக்கக்கூடிய ஆளில்லா வானூர்திகளின் பெருக்கம் அபாயங்களை அதிகரித்துள்ளதாக ஐநா உதவித் தலைவர் டாம் ஃபிளெட்சர் கூறினார்.
கடந்த மார்ச்சில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் பிரெஞ்சு உதவிப் பணியாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். சூடான், உக்ரேன் நாடுகளிலும் உதவி வாகனங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டன.
சென்ற ஆண்டு உதவிப் பணியாளர்களுக்கு காஸாவே மிகவும் ஆபத்தான இடமாக இருந்தது. அங்கு 186 பேர் கொல்லப்பட்டனர். 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் - காஸா போர் தொடங்கியதிலிருந்து உதவிப் பணியாளர்கள் கிட்டத்தட்ட 393 பேர் கொல்லப்பட்டதாக ஐநா பாலஸ்தீன அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸாவில் ஹமாசுக்கு எதிராகப் போரிடும் இஸ்ரேல், பொதுமக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்க பெருமுயற்சி எடுப்பதாகக் கூறியது.
மனிதநேய உதவிப் பணியாளர்களின் மரணங்கள் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழுவை அமைக்கும்படி ஐநா துயர்தணிப்பு முகமையின் முன்னாள் தலைவர் ஃபிலிப் லஸாரினி கோரியிருந்தார்.
உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் புஷ்ரா காலிதி, “மனிதநேய நடவடிக்கைகள் மீதே தாக்குதல் நடத்தப்படுவதை நாம் காண்கிறோம்,” என்றும் கூறி வருத்தப்பட்டார்.


