சான்ஃபிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனமான ‘ஓப்பன்ஏஐ’, 2030ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் US$278 பில்லியன் (S$354 பில்லியன்) வரை செலவிடத் திட்டமிட்டுள்ளதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அந்தச் செய்தித்தாள், இவ்வாண்டில் US$36 பில்லியனாக இருக்கும் தனது வருவாய் 2030ஆம் ஆண்டில் US$350 பில்லியனை எட்டும் என அந்நிறுவனம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், கணினித் தொழில்நுட்பக் கட்டமைப்பில் அதிகளவில் முதலீடு செய்து வருவதால், வருவாயைவிட செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என அது கணித்துள்ளதாகவும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க ‘ஓப்பன்ஏஐ’ மறுத்துவிட்டது.
முன்னதாக, பங்கு வெளியீட்டிற்கு (ஐபிஓ) ஆயத்தமாகும் வகையில், தனது சந்தை மதிப்பை US$1.2 டிரில்லியனுக்கும் அதிகமாக உயர்த்துவது குறித்து முதலீட்டாளர்களுடன் அந்நிறுவனம் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) புளூம்பெர்க் செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்த செய்தியை ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தித்தாள்தான் முதன்முதலில் வெளியிட்டது.
தமது நிறுவனம் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஓ வெளியீடு இன்னும் திட்ட அளவிலேயே உள்ளதாகவும் இவ்வாண்டில் அந்த வெளியீட்டுக்கு வாய்ப்பில்லை என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் நிதியைத் திரட்டினால், அது தனது ஐபிஓ வெளியீட்டை மேலும் ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளுக்குத் தள்ளிப்போட சாதகமான சூழலை உருவாக்கும் என புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிற நிறுவனங்களை வாங்குவதற்கும் அவற்றை இணைத்துக் கொள்வதற்கும் ஆதரவளிப்பதற்காகவே ‘ஓப்பன்ஏஐ’ கூடுதல் நிதித் திரட்டலை பரிசீலிப்பதற்கான மற்றொரு காரணம் என்றும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
