கோலாலம்பூர்: அளவுக்கு மீறிய பாரத்துடன் சென்ற 3,600க்கும் மேற்பட்ட லாரிகள் கடந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் பிடிபட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் புதன்கிழமை (ஜனவரி 21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை அதிகாரிகளிடம் சிக்கிய அந்த வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான பாரத்தை லாரிகள் ஏற்றிச்செல்வது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார் அவர்.
கடந்த ஈராண்டுகளாக கனரக வாகனங்களால் உயிரிழக்கும் விபத்துகள் தொடர்ந்து வருவதால் போக்குவரத்து அமைச்சு அதன்மீது கவனம் செலுத்தி வருவதாக திரு லோக் கூறினார்.
அதற்குத் தீர்வாக, விதிமுறைகளைக் கடுமையாக்குவது, அபராதத்தை அதிகப்படுவத்துவது போன்றவற்றை அறிமுகம் செய்வது குறித்து தமது அமைச்சு பரிசீலிப்பதாகவும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
வேகத்தைக் கண்டறியும் கருவியை லாரிகளில் பொருத்துவதைக் கட்டாயமாக்குவதும் பரிசீலனையில் இருக்கும் ஓர் அம்சம் என்றார் அவர்.
“அதிகமான பாரத்தைச் சுமந்து செல்லும்போது சாலைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அது அமைகிறது. வாகனம் நிலையாகச் செல்வது குறித்த அச்சமும் பிரேக் பிடிக்காமல் போனால் என்னவாகும் என்கிற கவலையும் சரியில்லாத சாலையில் விபத்து நிகழ்வதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்தும்,” என்று கேள்வி நேரத்தின்போது திரு லோக் கூறினார்.
கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் நீடித்தாலும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு 260 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு அது 163க்குக் குறைந்தது என்றார் அவர்.

