ஜோகூர் பாரு: ஜோகூர் சுங்கத்துறையினர் மேற்கொண்ட ஐந்து வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், ரிங்கிட் 11.7 மில்லியன் (S$3.63 மி.) மதிப்பிலான கள்ள சிகரெட்டுகளும் மதுபானமும் சிக்கின.
சோதனைகள் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் இருக்க, சரக்குகள் குறித்து கும்பல் போலி தகவல்களை அளிக்கும் முறையைக் கையாண்டதாக ஜோகூர் சுங்கத்துறை இயக்குநர் அமினுல் இஸ்மீர் முகம்மது சோஹாய்மி தெரிவித்தார்.
தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் நெகிழிப் பொருள்களைக் கொண்டிருப்பதாகக் கொள்கலன் ஒன்றைக் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும், கொள்கலனைச் சோதனையிட்டதில் கள்ள சிகரெட்டுகள் அதில் இருந்ததாகச் செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
“கொள்கலன் சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு ரிங்கிட் 8.4 மில்லியன் மதிப்பிலான சரக்குகளுடன் செல்வதாகக் குறிக்கப்பட்டிருந்தது,” என்றார் அவர்.
பாசிர் குடாங் துறைமுகத்தில் நடந்த இரண்டாவது சோதனை நடவடிக்கையின்போது கள்ள மதுபானம் கொண்ட இன்னொரு கொள்கலன் சிக்கியதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கொள்கலன் ஏற்றிச் செல்வது ‘சீன வழிபாட்டுப் பொருள்கள்’ என்று பொய்யாகக் குறிக்கப்பட்டிருந்தது என்றார். மதுபானத்தின் மதிப்பு ரிங்கிட் ஒரு மில்லியனுக்கும் மேல் என்று அவர் குறிப்பிட்டார்.
சேமிப்புக் கிடங்கு, லாரி, கார் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனம் ஆகியவற்றில் எஞ்சிய மூன்று சோதனை நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு கள்ள சிகரெட்டுகளும் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டன.

