மலேசியாவில் 5 மாதங்களில் 38,000 பேர் வேலை இழந்தனர்

மலேசியாவில் 5 மாதங்களில் 38,000 பேர் வேலை இழந்தனர்

2 mins read
0ff5a25b-978b-48df-9d73-18fc195cbaee
மலேசியாவின் மைஃபுயூச்சர் அமைப்பு வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. - படம்: என்எஸ்டிபி
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் மொத்தம் 38,953 பேர் தங்களது வேலைகளை இழந்துவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 25க்கும் 39 வயதிற்கும் இடைப்பட்ட இளம் ஊழியர்கள் ஆவர்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பான ‘பெர்க்கேசோ’ நிறுவனத்தின்கீழ் உள்ள வேலைவாய்ப்புக் காப்புறுதி அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, வேலை இழந்தவர்களில் 23,536 பேர் (60.4 விழுக்காடு) ஆண்கள் என்றும் 15,417 பேர் (39.6 விழுக்காடு) பெண்கள் என்றும் தெரியவந்துள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் அறிக்கை வெளியிட்டார்.

“கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை பதிவான இந்த வேலை இழப்புகள் நாட்டின் முக்கியப் பொருளியல் துறைகளான உற்பத்தி, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், மோட்டார் வாகனப் பழுதுபார்ப்பு, நிர்வாக, ஆதரவுச் சேவைத் துறைகளில் ஏற்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளியல் சூழலுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு, செயல்பாட்டு மாற்றங்கள் காரணமாகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை பெரும்பாலும் நடந்துள்ளதாக அவர் விளக்கினார்.

“2026-ன் முதல் ஐந்து மாதங்களில் பல்வேறு பொருளியல் துறைகளில் வேலை இழப்புச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை மனிதவள அமைச்சு மிகவும் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புதிய வேலைகளைப் பெறவும் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் பல்வேறு இடைக்கால நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களுக்கு இடையில், தேசிய ஊழியர் சந்தையை வலுப்படுத்த அரசு முயன்று வருகிறது,” என்று அமைச்சர் ரமணன் உறுதியளித்தார்.

வேலை இழப்புச் சவால்கள் நிலவினாலும் மலேசியாவின் ஊழியர் சந்தை தொடர்ந்து வலுவான மீள்திறனை வெளிப்படுத்தி வருவதாக அவர் சுட்டினார்.

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, நாட்டின் மொத்த ஊழியர் அணியின் எண்ணிக்கை 17.33 மில்லியனை எட்டியது. அதே நேரத்தில், நாட்டின் வேலையின்மை விகிதம் 3 விழுக்காடு என்ற மிகக் குறைந்த அளவிலேயே நீடிக்கிறது.

ஊழியர் பங்கேற்பு விகிதம் 70.9 விழுக்காடாக உள்ளது. இதில் ஆண்களின் பங்களிப்பு 82.9 விழுக்காடாகவும் பெண்களின் பங்களிப்பு 55.3 விழுக்காடாகவும் உள்ளது. இது மலேசிய ஊழியர் சந்தை இன்னும் நிலையாக இருப்பதைக் காட்டுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளம் ஊழியர்கள் என்பதால், வருங்காலத் தொழில் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மலேசியா முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ஊழியர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைப் பாதையைத் திட்டமிட, ஊழியர் சந்தை வழிகாட்டி (எல்எம்எக்ஸ்), மைஃபியூச்சர் கேலக்சி போன்ற தளங்களைப் பயன்படுத்தி விரிவான வேலைவாய்ப்புத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் ரமணன் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவேலையின்மைஅமைச்சர்இளையர்