தோக்கியோவில் வாரத்துக்கு 4 நாள் வேலை

2 mins read
e6d5a83f-aeba-47a5-ac50-dd38fcfe4272
உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நகரமாக ஜப்பான் தலைநகர் தோக்கியோ திகழ்கிறது.  - படம்: இணையம்

தோக்கியோ: தோக்கியோ அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நான்கு நாள்கள் வேலை, மூன்று நாள்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கைத் திட்டத்தை அந்நகரின் ஆளுநர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நகரமாக ஜப்பான் தலைநகர் தோக்கியோ திகழ்கிறது. அந்நாட்டில் பிறப்பு விகிதம் சரிந்த காரணத்தால் மூத்த வயது மக்கள் அதிகம் வசிக்கும் நாடாகவும் அது உள்ளது.

இந்நிலையில், தோக்கியோ பெருநகரக் கூட்ட அமர்வில் பேசிய ஆளுநர் யூரிகோ, “வேலை செய்யும் முறையை நாம் மறுஆய்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம். குழந்தைப் பிறப்பு, பராமரிப்பு போன்ற காரணங்களால் யாரும் தங்கள் பணியை விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” என்று கூறினார்.

“நாடு எதிர்கொண்டுள்ள இந்தச் சவாலான காலகட்டத்தில் நமது மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்து, அவற்றை மேம்படுத்துவது அவசியம். அந்த வகையில் நாட்டுக்கு முன்மாதிரியாக தோக்கியோ முன்னின்று வழிநடத்த வேண்டிய நேரம் இது,” என்றார் அவர்.

அதேபோல தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் முன்கூட்டியே வேலையிலிருந்து செல்ல புதிய கொள்கை ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளம் பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 7.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்தன. கடந்த 2022ல் வாரத்தில் நான்கு நாள்கள் வேலை செய்யும் சூழல் குறித்து அனைத்துலக அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் பங்கேற்ற ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்