தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உட்பட நால்வர் உயிரிழப்பு

1 mins read
b77fc5cf-c1b4-4cef-b46a-da6a3c5f01da
நெவாடா பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி வளைத்துள்ள சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள். - படம்: இபிஏ

லாஸ் வேகஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் உட்பட நால்வர் உயிரிழந்ததாக அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாகவும் அவர்கள் கூறினர்.

சந்தேக நபரின் அடையாளத்தையும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையும் வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக லாஸ் வேகஸ் பெருநகரக் காவல்துறை அதிகாரி கெவின் மெக்மஹில் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த பலர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

சந்தேக நபர்களுக்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது அதிகாரிகள் சிலர் லேசாக காயமடைந்தனர் எனவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேடுதல் வேட்டையில் சந்தேக நபர் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி சொன்னார்.

துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. சந்தேக நபர் பயன்படுத்திய துப்பாக்கி வகை குறித்து காவல்துறை தகவல் வெளியிடவில்லை.

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக தொலைப்பேசி அழைப்பு வந்த அடுத்த நொடியே சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து சந்தேக நபரைச் சுற்றி வளைத்ததாக காவல்துறை பேச்சாளர் ஆடம் கார்சியா தெரிவித்தார்.

குறைந்தது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்