ஓராண்டாகக் கோரப்படாத $4 மில்லியன் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசு

1 mins read
d3a09506-ffc3-4714-a696-bd27a7866979
பரிசுக்குரிய சீட்டு, 2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கியாமா நகரில் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. - படம்: த லாட்டரி கார்ப்பரேஷன்

நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவில் அதிர்ஷ்டக் குலுக்கலில் பரிசு பெற்ற $4.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (S$4.08 மில்லியன்) ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் யாரும் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பரிசு பெற்றவர் பற்றிய விவரமும் தெரியவில்லை. ஆனால், அவர் பரிசுக்குரிய சீட்டை 2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கியாமா நகரில் வாங்கியதாகத் தெரிகிறது.

பரிசுத் தொகை அவருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதாமாதம் 20,000 ஆஸ்திரேலிய டாலராக வழங்கப்படும்.

பரிசுக்குரிய சீட்டை வைத்திருப்பவர் அதை உரியமுறையில் பதிந்துகொள்ளவும் இல்லை என்று ஆஸ்திரேலிய அதிர்ஷ்டக் குலுக்கல் அமைப்பான ‘லாட்’ கூறியது. அத்தகைய பரிசுச் சீட்டை ‘லாட்’ உறுப்பினர் சங்கத்திடமோ இணையம் வாயிலாகவோ அவர் பதிந்துகொள்ளவில்லை.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) வெளியிட்ட அறிக்கையில், “ஏறக்குறைய 12 மாதங்களாகத் தான் பல மில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர் என்று தெரியாமலே ஒருவர் நடமாடிக்கொண்டிருக்கலாம் என்பதை நம்பவே முடியவில்லை,” என்று ‘லாட்’ அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதிர்ஷ்டக் குலுக்கலில் பரிசு பெற்ற தொகையை ஆறு ஆண்டுகளுக்குள் கோரிப் பெறவேண்டும். தவறினால் அந்தத் தொகை ‘நியூ சவுத் வேல்ஸ் லாட்டரிஸ்’ அமைப்புக்குச் சொந்தமாகிவிடும்.

குறிப்புச் சொற்கள்