சோல்: தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்த காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்ததை அடுத்து, அந்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தெற்கில் உள்ள சான்சியோங் மாவட்டத்திலும் தென் கொரியாவின் குறைந்தது மூன்று வெவ்வேறு பகுதிகளிலும் மார்ச் 21ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
நான்கு பேரைப் பலி வாங்கி, ஆறு பேரைக் காயப்படுத்திய சான்சியோங் தீ, மார்ச் 22 இரவு நிலவரப்படி 25 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொரிய வனத்துறை தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 847 ஹெக்டர் நிலத்தை எரித்து, சான்சியோங்கில் வசிக்கும் சுமார் 260 பேரை வெளியேற வைத்துள்ள தீயை அணைக்க, அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களையும் நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும் திரட்டியுள்ளதாக வனத்துறை கூறியது.
காட்டுத் தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, தென்கிழக்கு நகரமான உல்சானிலும் அருகிலுள்ள கியோங்சாங் மாகாணத்திலும், சுமார் 620 குடியிருப்பாளர்கள் மற்ற இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக உள்துறை மற்றும் இடர்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தீயைக் கட்டுப்படுத்த வளங்களைத் திரட்டுவதற்கு வசதியாக தென் கொரியா, தெற்கு வட்டாரங்களில் அவசரநிலையை அறிவித்தது. மேலும் சான்சியோங்கை சிறப்புப் பேரிடர் மண்டலமாக அமைச்சு அறிவித்துள்ளது என்று புளூம்பர்க் செய்தி தெரிவித்தது.

