கடந்த ஆண்டு இறுதியில் தனது ஊழியர்களில் சிலருக்கு நான்காண்டு ஊதியத்திற்குமேல் போனஸ் வழங்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளது தைவானைச் சேர்ந்த 'எவர்கிரீன் மரின் கார்ப்பரேஷன்' எனும் நிறுவனம். அந்தக் கடல்துறை நிறுவனம், சராசரியாக 50 மாத போனஸ் வழங்கியது என்று விவரம் தெரிந்த ஒருவர் கூறியதாக புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது. நிறுவனத்தின் செயல்பாட்டையும் தனிப்பட்ட ஊழியரின் செயல்பாட்டையும் பொறுத்து ஆண்டிறுதி போனஸ் வழங்கப்படுவதாக எவர்கிரீன் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும், எவ்வளவு போனஸ் வழங்கப்பட்டது என்ற விவரத்தை அது வெளியிடவில்லை. அந்நிறுவனம் தன் ஊழியர்களில் சிலருக்கு 52 மாத போனஸ் வழங்கியதாக தைவானின் 'எக்கனாமிக் டெய்லி நியூஸ்' கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. சிலர் கடந்த மாத இறுதியில் 65,000 அமெரிக்க டாலர் வரை பெற்றதாக அச்செய்தி குறிப்பிட்டது. ஆனாலும், அந்நிறுவனத்தின் எல்லா ஊழியர்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை. தைவான் சார்ந்த ஒப்பந்தத்துடன் கூடிய ஊழியர்களுக்கே இப்படி ஆண்டுக்கணக்கில் போனஸ் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது அநியாயம் என்று குமுறுகின்றனர் அந்நிறுவனத்தின் ஷாங்காய் நகர ஊழியர்கள். அவர்களுக்கு ஐந்து முதல் எட்டு மாத போனசே வழங்கப்பட்டதாக 'கெய்க்சின்' செய்தி கூறுகிறது.
ஒரு மாதம், இரண்டு மாதமல்ல... நான்காண்டு போனஸ்!
1 mins read
எவர்கிரீன் மரின் நிறுவன ஊழியர்களில் சிலர் கடந்த மாத இறுதியில் US$65,000 வரை பெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன. படம்: புளூம்பெர்க் -

