மலேசியாவில் பாலியல் சேவை: 40 வெளிநாட்டவர்கள் கைது

மலேசியாவில் பாலியல் சேவை: 40 வெளிநாட்டவர்கள் கைது

2 mins read
c5b9f3b7-d1a3-4bbd-88f2-de4824c0b2d3
கைதான நபர்களில் 31 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 12 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள்.  - படம்: மலேசியக் குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர்: பாலியல் சேவை வழங்கும் குற்றக் கும்பலைக் குறிவைத்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொகுசு குடியிருப்புப் பகுதியான தேசா பல்வானில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிரடிச் சோதனையைக் குடிநுழைவுத் துறையின் சிறப்புக் குழுப் பிரிவு பிப்ரவரி 12ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிவாக்கில் மேற்கொண்டது.

மூன்று மாடி சொகுசு பங்களாவில் சிக்கிய அந்த நபர்களின் வயது 21க்கும் 43க்கும் இடைப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குற்றக்கும்பலின் முக்கிய நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சீனாவைச் சேர்ந்த ஆடவர். அந்த ஆடவர் தகுந்த வேலை அனுமதி வைத்திருந்தார்.

கைதான மற்ற நபர்களில் 30 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 11 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள்.

மேலும் உள்ள ஒன்பது நபர்களில் ஐந்து பேர் வியட்னாமியப் பெண்கள், இரண்டு மியன்மார் பெண்கள், இரண்டு ஜப்பானியப் பெண்கள் என்று குடிநுழைவுத் துறை அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில், 25 சீன நபர்களிடம் சுற்றுலா விசா இருந்தது. ஒரு சீனக் குடிமகனிடம் வேலை விசா இருந்தது.

அதேபோல் இரண்டு ஜப்பானியப் பெண்களிடமும் ஐந்து வியட்னாமியப் பெண்களிடமும் சுற்றுலா விசா இருந்தது.

மற்ற நால்வரிடம் எந்த விசாவும் இல்லை. அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்தனர்.

கைது நடவடிக்கையின் போது 36 நபர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் அந்த வீட்டிலிருந்து 26,600 ரிங்கிட் கைப்பற்றப்பட்டது. அந்தத் தொகை சட்டவிரோத நடவடிக்கை மூலம் ஈட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

விசாரணையின் போது மேலும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாலியல் சேவை வழங்குவதற்காகவே அந்தச் சொகுசு பங்களாவை குற்றக்கும்பல் மறுவடிவமைப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே விசாரணைக்கு உதவுமாறு சிங்கப்பூர் ஆடவருக்கும் மலேசிய ஆடவருக்கும் அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்