கெடா: மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருக்கும் வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட கோழிகளையும் வாத்துகளையும் விழுங்க முயன்ற மலைப்பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கெடா மாநிலத்தில் உள்ள கம்போங் பாங்கோல் பகுதியில் இச்சம்பவம் நடந்தது. ஐந்து மீட்டர் நீளமும் 40 கிலோ எடையும் உடைய மலைப்பாம்பு தங்களை நெருங்குவதை உணர்ந்த பறவைகள் சத்தம் போட்டன.
அவற்றின் எச்சரிக்கை ஒலியைக் கேட்டு அங்கு வந்த உரிமையாளர் உதவிக்காகத் தீயணைப்பு மீட்பு குழுவினரை அழைத்தார்.
உதவி வேண்டித் தங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 5.35 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் ஆறு அதிாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பேலிங் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் கூறினார்.
“நாங்கள் அங்கு சென்றபோது, பறவைகள் தடுத்துவைக்கப்பட்ட இடத்திலிருந்து பாம்பு வெளியேறி அருகிலுள்ள தொலைத்தொடர்பு துணை மின்நிலையத்திற்குள் மறைந்திருக்கச் செல்வதைக் கண்டோம்,” என அவர் கூறியதாக மலாய் நாளிதழான ஹரியன் மெட்ரோ செய்தி வெளியிட்டது.
சீறிய பாம்பைச் சிறப்புக் கருவிகள் பயன்படுத்தி, 30 நிமிடங்கள் போராடி மீட்புக் குழுவினர் மீட்டனர்.
வனவிலங்கு, தேசிய பூங்கா கழகத்திடம் அந்தப் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இப்பகுதியில் பாம்பு தொடர்பான 14 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை ராஜ நாகம், மலைப்பாம்பு தொடர்புடையவை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திரு சுல்கைரி தெரிவித்தார்.