பள்ளி இலவச உணவருந்திய 400 சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு

2 mins read
e8d4f1e1-eeab-4c20-9c78-763c31062406
சிறுவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்குமான இலவச உணவுத் திட்டத்தை அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கடந்த ஜனவரியில் தொடங்கி வைத்தார். - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு பெங்குலு மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட ஏறக்குறைய 400 சிறுவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் முதன்மை உணவுத் திட்டத்துடன் தொடர்புடைய மிகப்பெரிய உணவு நச்சு பாதிப்பு இதுவாகும்.

சிறுவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்குமான இலவச உணவுத் திட்டத்தை திரு பிரபோவோ கடந்த ஜனவரியில் தொடங்கி வைத்தார். ஆனால், இத்திட்டம் இந்தோனீசியா முழுவதும் நச்சுணவால் நூற்றுக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட்டில் மத்திய ஜாவாவில் உள்ள பள்ளிகளில் இலவச உணவு உண்ட 365 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, சுகாதாரம் இல்லாததால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்று ஆய்வக முடிவுகள் சுட்டிக்காட்டின.

பெங்குலுவில், நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், ஆகஸ்ட் 28ஆம் தேதி வயிற்றுவலியால் அவதிப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் அரசாங்கத்தின் காணொளி ஒன்று தெரிவித்தது.

உடல்நலக்குறைவுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்குவார்கள் என்று அந்த மாநிலத்தின் துணை ஆளுநர் மியான் தெரிவித்தார்.

“ஆய்வக முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அதேவேளையில், சமையலறையின் செயல்பாடுகளை நாங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்போம். இதில் உள்ள குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்துவோம். இது தேசிய ஊட்டச்சத்து அமைப்பு விசாரணைக்குழு, அதிகாரிகளின் பொறுப்பாகும்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தை நடத்தும் தேசிய ஊட்டச்சத்து அமைப்பின் தலைவர் டாடான் ஹிந்தயானா, சமையலறை அண்மையில்தான் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது என்றும் உணவுக்கான ஆய்வக முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அதே நேரத்தில், சேவைகளை மதிப்பீடு செய்யுமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்