மலேசியாவில் 4,000 பள்ளிப் பகடிவதைச் சம்பவங்கள்

மலேசியாவில் 4,000 பள்ளிப் பகடிவதைச் சம்பவங்கள்

கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரைக்குமான புள்ளிவிவரங்களை மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்டது
படம்: மலாய் மெயில்

14 Oct 2026 - 4:31 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியப் பள்ளிகளில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 4,000க்கும் மேற்பட்ட பகடிவதைச் சம்பவங்கள் பதிவானதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிப் பள்ளிகளும் (boarding school) அவற்றில் அடங்கும்.

அச்சம்பவங்களில் 2,480 சம்பவங்கள் உடல்ரீதியான துன்புறுத்தல் சம்பந்தப்பட்டவை; 1,386, வார்த்தைகளால் இழைக்கப்பட்ட துன்புறுத்தல் சம்பவங்கள்; 243, வார்த்தைகளின்றி மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல் சம்பவங்கள்; 180, இணையத் துன்புறுத்தல் சம்பவங்கள். மலேசியக் கல்வி அமைச்சு இத்தகவல்களை வெளியிட்டது.

‘தொடர் முயற்சி தேவை’

“பகடிவதையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும் அதற்கு ஒழுங்கு நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும் இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

“ஒவ்வொரு புகாருக்கும் தகுந்த கவனம் தரப்படவேண்டும். தீர்மானிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு விசாரணை நடத்திய பிறகு தேவையான தலையீட்டு நடவடிக்கை இருக்கவேண்டும்,” என்று கல்வி அமைச்சு எழுத்து வடிவில் புதன்கிழமை (அக்டோபர் 14) நாடாளுமன்றத்துக்குப் பதிலளித்தது.

பாதுகாப்பு, கண்காணிப்பு

பாதுகாப்பையும் கண்காணிப்பையும் மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அமைச்சு தெரிவித்தது. மூன்று மில்லியன் ரிங்கிட் (943,500 வெள்ளி) நிதி ஒதுக்கீட்டின் மூலம் சென்ற ஆண்டு 200 விடுதிப் பள்ளிகளில் (boarding schools) சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது அந்நடவடிக்கைகளில் அடங்கும்.

நடவடிக்கை இவ்வாண்டும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன்கீழ் மேலும் 333 விடுதிப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

“மூன்றாம் கட்டமாக அடுத்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 1,000 பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றும் அது தெரிவித்தது.

பள்ளித் தங்குவிடுதி துணை கண்காணிப்பாளர்கள்

கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து மைஸ்டெப் என்றழைக்கப்படும் மலேசிய குறுகிய கால வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 300 மாணவர் தங்குவிடுதி துணை கண்காணிப்பாளர்கள் (Hostel Warden Assistants) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சொன்னது.

“அவர்கள் மாணவர் பாதுகாப்பு, நலன் ஆகிய அம்சங்களில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர் தங்குவிடுதிக் கண்காணிப்பாளர்களுக்குக் கைகொடுப்பர். குறிப்பாக, இரவில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இது பொருந்தும்,” என்றும் கல்வி அமைச்சு சுட்டியது. 850 பள்ளிகளில் தாங்கள் தங்குவிடுதிப் பாதுகாப்புச் சோதனைகளை நடத்தியிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாபகடிவதைகல்வி அமைச்சுநாடாளுமன்றம்பள்ளி