கோலாலம்பூர்: மலேசிய அரசு ஊழியர்கள் 42.7 விழுக்காடுவரை சம்பள உயர்வு பெறுவர் என்று மலேசியத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட பொதுச் சேவை சம்பள முறை இதற்கு வழிவகை செய்யும்.
“முன்னர் கூறியதுபோல், அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று திரு ஃபாஹ்மி புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 7) கூறினார்.
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 15% முதல் 42.7% வரை இருக்கும் என்ற அவர், குறிப்பாக கடைநிலை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் என்றும் சொன்னார்.
தலைமைச் செயலர், தலைமை இயக்குநர் போன்ற பொறுப்புகளில் உள்ளோருக்கு ஊதிய உயர்வு மிதமாக இருக்கும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திரு ஃபாஹ்மி தெரிவித்தார்.
திருத்தப்பட்ட பொதுச் சேவை சம்பள முறையின் முதற்கட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இவ்வாண்டு அக்டோபரில் 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும்போது முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் செவ்வாய்க்கிழமையன்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.
அதற்கு முதல்நாள்தான் அரசாங்க ஊழியர்கள் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஊதிய உயர்வு எவ்வளவு என்பதை இன்னும் ஒரு வாரத்தில் கணக்கிட முடியும் என்று பொது சேவைத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் முகம்மது ஷைஃபுல் இப்ராகிம் தெரிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி இடம்பெறும் ஒரு நிகழ்வின்போது மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.