மலேசியாவில் மின்னல் தாக்கித் தீயில் சிக்கிய 42 கட்டடங்கள்

மலேசியாவில் மின்னல் தாக்கித் தீயில் சிக்கிய 42 கட்டடங்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

06 Oct 2026 - 12:13 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியா முழுவதும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மின்னல் தாக்கியதால் 42 கட்டடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

அவற்றில் குறிப்பாக, ஏப்ரல் மாதம் மட்டும் 13 சம்பவங்கள் பதிவானதாக அந்தத் துறையின் தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமது கூறினார்.

ஜூலை மாதம் ஆறு தீச்சம்பவங்களும் மே, ஜூனில் மாதத்திற்கு ஐந்து சம்பவங்களும் மார்ச்சில் மூன்று சம்பவங்களும் மின்னல் தாக்கியதால் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கட்டடத் தீ விபத்துகள் என வகைப்படுத்தப்படும் இத்தகைய தீ விபத்துகளுக்கான புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி மாதம் மட்டும் மின்னல் தாக்கியதால் எந்த ஒரு தீச்சம்பவமும் பதிவாகவில்லை.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நிகழ்ந்த சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 5.3. ஏப்ரல் மாதம் பதிவான தீச்சம்பவங்களின் எண்ணிக்கை மாதாந்தரச் சராசரி அளவைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகம் என்றார் திரு நோர் ஹிஷாம்.

மலேசியாவில் ஆண்டுதோறும் இரண்டு மழைப் பருவங்கள் நிகழும். மார்ச் முதல் மே மாதம் வரை முதல் பழைப்பருவமும் செப்டம்பம், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது பருவமும் நிகழும்.

முதல் மழைப் பருவகாலத்தில் ஏப்ரல் மாதம் அதிகமாக நிகழ்ந்த தீச்சம்பவங்கள் அதிகமான மின்னல்களால் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

மோசமான வானிலைக் காலங்களில் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பல்வேறு அவசர நிலைகளைக் கையாள்கிறது.

கட்டடத் தீ விபத்துகள், அவற்றால் ஏற்படும் சேதங்கள் உட்பட மின்னல் தொடர்பானவை அவை.

குடியிருப்புப் பகுதிகள், வணிகக் கட்டடங்கள், மின் துணை நிலையங்கள் அல்லது தொழிற்சாலைகளை மின்னல் தாக்கும்போது, அதனால் ஏற்படும் சக்திவாய்ந்த மின்சார அலைகள் கூரைகளையும் கட்டட மற்றும் மின் அமைப்புகளையும் சேதப்படுத்தக்கூடும் அல்லது அவற்றால் தீ மூளக்கூடும்.

குறிப்புச் சொற்கள்