புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று

2 mins read
06cd4852-6208-45bb-a011-2c1f33466fbf
புக்கிட் பாஞ்சாங் பிளாசாவில் உள்ள ஃபேர்ஃபிரைஸ் கிளை ஆகியவை கொரோனா தொற்றியோர் சென்று வந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 42 பேரை கொவிட்-19 தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 55,395ஆக உயர்ந்தது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய கொரோனா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஈரிலக்கத்தில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 30ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் இதுதான்.

மார்ச் 30ஆம் தேதியன்று 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனா தொற்று கண்டு இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டவர்களில் சமூகத்தில் ஒருவர் மட்டுமே அடங்குவார் என்றும் அவர் ஒரு சிங்கப்பூரர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பின்னர், வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பெற்றவர்களில் 11 பேரையும் கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் 61 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களுள் ஒரு வயதே நிரம்பிய சிங்கப்பூர் சிறுமியும் நீண்டகால வருகை அனுமதி பெற்றிருக்கும் மூன்றரை வயது இந்தியச் சிறுமியும் அடங்குவார்.

அத்துடன், புக்கிட் தீமா சந்தை, உணவு நிலையம், 111 சோமர்செட், புக்கிட் பாஞ்சாங் பிளாசாவில் உள்ள ஃபேர்ஃபிரைஸ் கிளை ஆகியவை கொரோனா தொற்றியோர் சென்று வந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்த 37 கிருமித்தொற்றுக் குழுமங்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாக அமைச்சு கூறியது. கிருமித்தொற்றில் இருந்து மீண்டவர்களும் பரிசோதனைகளில் 'தொற்று இல்லை' என முடிவு வந்தவர்கள் மட்டுமே விடுதிகளில் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தின நிலவரப்படி, இன்னும் கிட்டத்தட்ட 22,500 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் இடங்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்படும் காலம் நிறைவுற்றதும் அவர்களிடம் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இதுவரை 27 பேர் மாண்டுவிட்டனர்.

கொரோனா தொற்றி இருந்தபோது வேறு உடல்நலக் கோளாறுகளால் 15 பேர் இறந்துவிட்டனர்.

உலகளவில் கிட்டத்தட்ட 20.8 மில்லியன் பேரை பாதித்துவிட்ட கொரோனா, 744,000க்கு மேற்பட்டோரின் உயிரையும் பறித்துவிட்டது.