ரஷ்ய ராணுவத்திற்காகச் சேவையாற்ற 422,000 பேர் இணக்கம்

1 mins read
01cb1932-6186-4d4f-a866-452851369c5a
கடந்த 2024ஆம் ஆண்டில் ஏறக்குறைய 450,000 பேர் ரஷ்ய ராணுவச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: கடந்த 2025ஆம் ஆண்டு ரஷ்ய ஆயுதப்படைகளில் இணைந்து சேவையாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் 422,704 பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் துணைத் தலைவர் திமித்ரி மெட்வேதிவ் தெரிவித்துள்ளதாக அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை முந்திய 2024ஆம் ஆண்டைவிட குறைவு. அவ்வாண்டில் ஏறக்குறைய 450,000 பேர் ரஷ்ய ராணுவச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சக பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்த முன்னாள் ரஷ்ய அதிபரான மெட்வேதிவ், ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றியதை அரசாங்க ஊடகங்கள் வெளியிட்ட காணொளி காட்டியது.

முன்னதாக, 2025ஆம் ஆண்டில் ஆளில்லா வானூர்திகளை இயக்குவோர்க்கான ஆட்சேர்ப்பு வலுவாக இருந்தது என்று கடந்த டிசம்பரில் நடந்த ஆண்டிறுதிச் செய்தியாளர் சந்திப்பின்போது அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஏறக்குறைய 32,000 பேர் தன்னார்வப் படையணிகளில் சேர்ந்து, உக்ரேனுக்குப் போரிடச் சென்றனர் என்று மெட்வேதிவ் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) தெரிவித்ததாகவும் செய்திகள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்