மலேசியாவில் 43,000 மோசடிப் பதிவுகள் அகற்றம்

மலேசியாவில் 43,000 மோசடிப் பதிவுகள் அகற்றம்

2 mins read
மோசடிக் குற்றங்களை மலேசிய ஊடக மன்றம் கையாளும்
2aadf1ea-ff40-4413-884d-7e8326a052b8
மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் அகற்றப்பட்ட பதிவுகளின் விவரங்களை வெளியிட்டது. - படம்: சாவ்பாவ்

கோலாலம்பூர்: மலேசியாவில் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 43,618 மோசடி சார்ந்த பதிவுகள் அகற்றப்பட்டதாக அந்நாட்டின் தொடர்புத் துறை துணை அமைச்சர் டியோ நியெ சிங் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தெரிவித்தார். மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் மோசடிப் பதிவுகளின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் 6,297 மோசடிப் பதிவுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 63,652 ஆகவும் 2025ல் 98,503 ஆகவும் கூடியது.

இவ்வாண்டின் முதல் காலாண்டிலேயே இந்த அளவு மோசடிப் பதிவுகள் அகற்றப்பட்டது கவனத்துக்குரியது என்று 21ஆம் ஆசிய செய்தியாளர்கள் அமைப்பின் மாநாட்டில் (CAJ) உரையாற்றியபோது அமைச்சர் டியோ கவலை தெரிவித்தார்.

மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் (ஏஐ) கொண்டு அரச குடும்பத்தினரையும் உள்ளடக்கிய ஆள்மாறாட்டக் குற்றங்களைச் செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றி, பல சமூக ஊடகங்களில் நிதியுதவி மோசடித் திட்டங்களை மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்துள்ளனர் என்று அமைச்சர் விளக்கினார்.

இதே செயல்முறையைக் கொண்டு முன்னாள் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் படத்தை வைத்து நிதியுதவி மோசடிப் பதிவுகள் வெளியிடப்பட்டதையும் அமைச்சர் தமது உரையின்போது நினைவுகூர்ந்தார்.

மாநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள், வெளியான உண்மையற்ற செய்திகள் போன்றவை குறித்து மலேசிய ஊடக மன்றத்துக்கு (MMM) ஏழு புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஐந்து புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது எனவும் மீதம் இரண்டு விசாரணையில் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மை, நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றல் ஆகியவற்றை உறுதிசெய்து செயல்பாட்டை மேம்படுத்த அனைத்து புகார்களும் அதிகாரபூர்வமாக மலேசிய ஊடக மன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அமைச்சர் டியோ தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்