வாஷிங்டன்: அமெரிக்கா, ஈரான், வட்டார சமரசப் பேச்சாளர் குழு ஆகியவை இணைந்து போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 45 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து ஆலோசித்து வருவதாக ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) தெரிவித்தது.
அமைதிப் பேச்சுவார்த்தையை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
முதல் கட்டமாக, 45 நாள்கள் தற்காலிகப் போர்நிறுத்தம் நடப்புக்கு வரும். அந்த இடைவெளியில், போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான இறுதி உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பேச்சுவார்த்தைக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், போர்நிறுத்தக் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும், இந்தத் தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இது குறித்து அமெரிக்கா இன்னும் அதிகாரபூர்வக் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வரை (சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை இரவு) காலக்கெடு விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

