தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளிடம் 450 பாட் வசூலிக்கத் திட்டம்

தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளிடம் 450 பாட் வசூலிக்கத் திட்டம்

1 mins read
b163d15c-960f-4fb2-9c3e-d34dd4471e05
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் ஒரே நுழைவுக் கட்டணமாக 450 பாட் வசூலிப்பது குறித்து தாய்லாந்து அரசு ஆராய்ந்து வருகிறது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம், சுற்றுலாப் பயணிகளுக்கு 450 பாட் (ஏறக்குறைய S$17.39) நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது.

இந்த உத்தேச முன்மொழிவு, தேசிய சுற்றுலா கொள்கைக் குழுவிடம் ஆய்வுக்காகச் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் 28 வரை பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்று அந்நாட்டின் சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வான், நிலம் அல்லது கடல் வழியாக வந்தாலும் அனைவருக்கும் ஒரே சீரான 450 பாட் கட்டணம் முன்மொழியப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுராசக் பன்சாரோன்வோரகுலின் தெரிவித்துள்ளார்.

“இதில் திரட்டப்படும் நிதி, தாய்லாந்தின் சுற்றுலா உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். இது அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தை முழுமையாகச் சார்ந்திருக்காமல் இத்துறை வளர உதவும்,” என்று தாய்லாந்து மக்கள் தொடர்புத் துறை இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இக்கட்டணத்தை வசூலிக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்திற்கான சுற்றுலா நுழைவுக் கட்டணத் திட்டம் முதன்முதலில் 2019 முதல் 2020 காலக்கட்டத்தில் முன்வைக்கப்பட்டது. திருத்தங்களுக்குப் பிறகு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 450 பாட் என்ற நிலையான கட்டணம் முன்மொழியப்பட்டது.

கடந்த ஆண்டு, தாய்லாந்துக்கு ஏறக்குறைய 33 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதன் மூலம் சுற்றுலா நிதிக்கு ஏறக்குறைய 1,480 கோடி பாட் வருவாய் கிடைத்திருக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துசுற்றுலாத்துறைகட்டணம்