தாய்லாந்தில் 4,576 சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்; 617 பேர் கைது

தாய்லாந்தில் 4,576 சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்; 617 பேர் கைது

படம்: ஃப்ரீ மலேசியா டுடே

22 Jul 2026 - 5:16 pm

1 mins read

பேங்காக்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது சட்டவிரோதகாகச் செயல்பட்டுவந்த 4,576 காற்பந்துச் சூதாட்ட இணையத்தளங்களைத் தாய்லாந்துக் காவல்துறை முடக்கியுள்ளது. அத்துடன், 617 பந்தயப் பிடிப்பாளர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 20 பில்லியன் பாட்டிற்கும் (கிட்டத்தட்ட $764 மில்லியன்) அதிகமான பணம் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தாய்லாந்து அரசக் காவல்துறையின் தகவல் தொழில்நுட்பக் குற்ற ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் தானா சுவோங் தெரிவித்துள்ளார்.

இணையவழி மோசடிகளுக்குப் போலி வங்கிக் கணக்குகள் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இதுபோன்ற போலி வங்கிக் கணக்குக் கட்டமைப்புகளை வேரோடு துடைத்தொழிக்கும் தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மோசடி மூலம் பெறப்படும் பணத்தைத் தங்கள் வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கச் சிலர் அனுமதிப்பதை அவர் சுட்டினார். இத்தகையோரை மோசடிக்காரர்கள் பயன்படுத்துவதாகத் திரு சுவோங் கூறினார்.

ஆள்மாற்றாட்ட மோசடிகளே தொடர்ந்து பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதிக்கும் 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 1,441 இணையவழிச் சூதாட்ட வழக்குகள், 787 சட்டவிரோதச் சூதாட்ட இணையத்தள வழக்குகள், 3,106 இணையவழி ஆயுத விற்பனை வழக்குகள் ஆகியவை தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டதாகத் திரு சுவோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துஇணையம்சூதாட்டம்கைது