தமக்குப் பிடித்தமான வேலைக்காக விண்ணப்பித்த ஒரு பெண், இத்தனை காலம் ஏன் அதற்குப் பதில் ஏதும் வரவில்லை என்று 48 ஆண்டுகளாகக் காத்திருந்தார்.
இங்கிலாந்தின் லிங்கன்ஷயரைச் சேர்ந்த டிஸி ஹோட்சன், 70, சாகச மோட்டார்சைக்கிளோட்டி வேலைக்காக 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
அது தொடர்பாக ஏன் தமக்குப் பதில் வரவே இல்லை என்று பல ஆண்டு காலமாக அவர் யோசித்துக்கொண்டே இருந்தார்.
அஞ்சல் அலுவலகத்தில் ‘டிராவர்’ ஒன்றின் பின்னால் அந்த விண்ணப்பக் கடிதம் இத்தனை ஆண்டுகளாகச் சிக்கியிருந்ததாக இப்போது தெரியவந்துள்ளது.
இருப்பினும், அந்தப் பெண் எந்த வகையிலும் மனந்தளராது துணிச்சல்மிக்க ஒரு வாழ்க்கைத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
கடிதம் திருவாட்டி ஹோட்சனுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் கைப்பட எழுதப்பட்ட ஒரு குறிப்பும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
அதில் ‘ஸ்டெய்ன்ஸ் அஞ்சல் அலுவலகத்தால் தாமதிக்கப்பட்ட விநியோகம். டிராவர் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகள் தாமதம் மட்டுமே’ என்று எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும், தாம் பலமுறை வீடு மாறியுள்ளதாகவும் நான்கு, ஐந்து முறை நாடே மாறியுள்ளதாகவும் கூறிய திருவாட்டி ஹோட்சன், அக்கடிதம் எப்படித் தம்மை வந்து சேர்ந்தது என்பது பெரும் மர்மம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அனுப்பிய விண்ணப்பத்துக்குப் பதில் வரும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவர், வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தார்.
தென்னாப்பிரிக்காவில் பாம்புகளைக் கையாள்பவர், குதிரைகளைச் சாந்தப்படுத்துபவர், விமானி, சாகச விமானி, விமானப் பயிற்சி அளிப்பவர் எனப் பல்வேறு வேலைகளை ஒரு கை பார்த்தார் அவர்.

