லாவோஸ் குகையில் சிக்கிய எழுவரில் ஐவர் மீட்பு

லாவோஸ் குகையில் சிக்கிய எழுவரில் ஐவர் மீட்பு

1 mins read
849459a4-0c85-41f3-a3a7-14af8a6b7b0c
மீட்புப் பணியில் உதவச் சென்ற ஃபின்லாந்தின் முக்குளிப்பாளர் மைக்கோ பாசியைத் தாய்லாந்து மீட்புப் பணியாளர்கள் திங்கட்கிழமை (மே 25) வரவேற்றனர். - படம்: இபிஏ

வியெந்தியன்: லாவோசில் வெள்ளத்தால் சூழ்ந்த குகையில் சிக்கிய ஏழு பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். லாவோசையும் தாய்லாந்தையும் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் அதனைத் தெரிவித்தனர்.

“ஐவர் உயிருடன் இருந்ததைக் கண்டுபிடித்தோம். அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனர். இன்னும் இருவரைத் தேடி வருகிறோம்,” என்று லாவோசைச் சேர்ந்த ‘மக்களுக்கான மீட்புத் தொண்டூழிய அமைப்பு’, சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் எஞ்சியோரைக் கண்டுபிடிக்க விரைந்து போராடுவதாக மீட்புக் குழுவைச் சேர்ந்த சிறப்பு முக்குளிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“இன்று ஏழாவது நாள். வழியில் பல சவால்கள் இருக்கின்றன,” என்று ஃபின்லாந்தின் முக்குளிப்பாளர் மைக்கோ பாசி சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

தாய்லாந்தில் 2018ஆம் ஆண்டு வெள்ளம் நிரம்பியிருந்த குகையிலிருந்து இளம் காற்பந்து அணியினரை மீட்ட குழுவினரில் அவரும் ஒருவர்.

லாவோசில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 பேர், மத்திய ஸேசொம்பௌன் மாநிலத்தில் உள்ள குகைக்குள் இம்மாதம் (மே) 20ஆம் தேதி நுழைந்தனர். அந்தக் குகை, தலைநகர் வியெந்தியனிலிருந்து கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்திற்குள் தங்கத்தைத் தேடி அங்குச் சென்றனர். ஆனால் பெருமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாகக் குகைக்குள்ளிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கினர்.

ஒருசில நாள்களாகவே அதிகாரிகளும் கிராமவாசிகளும் தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இருப்பினும் குழுவினரை மீட்புப் பணியினரால் எட்டமுடியவில்லை.

புதன்கிழமை (மே 27) காலையில் தண்ணீர் வடியத் தொடங்கியவுடன் மீட்புப் பணியாளர்கள் குழுவினரில் ஐவரை மீட்டனர்.

குறிப்புச் சொற்கள்