தைபெய் - தைவானின் வடகிழக்கில் உள்ள யீலான் என்ற புறநகர் பகுதியை (ஏப்ரல் 9) 5.8 ரிட்கர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அதில் எந்த உயிருடற்சேதமும் இல்லை என்று தைவானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
தலைநகர் தைபெயில் உள்ள கட்டடங்களை அசைத்த நிலநடுக்கம் 72.4 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய தைபெய் நகர், தையுவென், தைசுங் ஆகிய பல பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. ஆகக் கடுமையான அதிர்வுகள் யீலானின் உட்டாவிலும் டரொக்கோ தேசியப் பூங்காவிலும் பதிவாகின.
தைபெய் ஆட்டங்கண்டபோது அங்கிருந்த குடியிருப்பாளருக்கு கைப்பேசிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அமைதி காக்கும்படியும் பாதுகாப்பான இடங்களில் மறைந்துகொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டனர்.
தைவானை இதற்குமுன் சென்ற ஆண்டு 7.2 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் உலுக்கியதில் குறைந்தது 13 பேர் பலியாயினர்.
2016ஆம் ஆண்டு நூற்றுக்கும் அதிகமானோரும் 1999ஆம் ஆண்டு 2,000க்கும் அதிகமானோரும் தைவானை உருகுலைத்த நிலநடுக்கங்களில் மாண்டனர்.