தாய்லாந்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள்: இறந்தோரில் இருவர் ரஷ்யர்கள்

தாய்லாந்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள்: இறந்தோரில் இருவர் ரஷ்யர்கள்

படம்:த நேஷன் / ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

02 Aug 2026 - 1:21 pm

2 mins read

பேங்காக்: தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சோன்புரி மாநிலத்தில் ஜூன் மாதத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் ஜூலை மாதத்தில் இரு ரஷ்ய சகோதரர்களும் கொலை செய்யப்பட்டனர்.

அந்தக் கொலைகளில் அதிகாரிகள் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் தம்மையும் தீவிரமாக இணைத்துள்ளார் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல். மறைந்த இரு ரஷ்ய சகோதரர்களுக்காக அவர் ரஷ்ய மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்தின் பல நகரங்களுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினருக்குப் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அவர் தமது அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அண்மைய கொலைகள் நடந்த இடங்களைப் பார்வையிட சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) மதியம் 2 மணியளவில் காவல்துறைத் தலைவர் கிட்ராட் பான்ட் உட்பட பல அதிகாரிகளுடன் அவர் சென்றார். இரு கொலைச் சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது வெளியிடப்படவில்லை.

ஒரு சாலையின் அருகே அந்த ரஷ்ய சகோதரர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அவர் நேரில் சென்று பார்த்தார்.

அதன் அருகிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் என மூவரும் கொலை செய்யப்பட்டு ஒரு குழியில் புதைக்கப்பட்டிருந்தனர். தாய்லாந்தைச் சேர்ந்த அந்த குடும்பத்தினரின் உடல்கள் வெள்ளிக்கிழமை வெளியில் எடுக்கப்பட்டன. அந்த இடத்தையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார்.

அதிகாரிகளிடம் பல தகவல்களைக் கேட்டறிந்த பிரதமரின் மனநிலை கவலையுற்றது. இந்தக் கொலைகள், சிறந்த சுற்றுலாத் தலம் என்ற நற்பெயர் பெற்ற தாய்லாந்தின் மதிப்பை பாதித்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

அதோடு, அக்கொலைகள் அனைத்துலக அளவில் புகழ்பெற்ற பட்டாயா, சோன்புரி போன்ற இடங்களின்மீது சுற்றுப்பயணிகள் வைத்துள்ள நம்பிக்கை தளர்வு அடையும் எனவும் அவர் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
கொலைதாய்லாந்துஅரசாங்கம்காவல்துறைவிசாரணைபிரதமர்புதைகுழிகொள்ளை