மலேசியாவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் போக்கு 50% அதிகரிப்பு

மலேசியாவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் போக்கு 50% அதிகரிப்பு

2 mins read
393acd5c-5da0-4787-8a98-85e844f31c57
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 2026 முற்பாதியில் மட்டும் 1,278 வழக்குகள் பதிவாகியுள்ளன. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் பொறுப்பின்றியும் அபாயகரமான முறையிலும் வாகனம் ஓட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை ஒப்பிட, இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் அத்தகைய வழக்குகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கூடுதலாக, அதாவது 1,278 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025 முற்பாதியில் அத்தகைய 852 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

இத்தகைய போக்கு சாலையில் பகடிவதைகளுக்கும் வன்முறைகளுக்கும் வழிவகுக்கும் என்று மலேசியக் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாநில அளவில் ஜோகூர் 354 வழக்குகளுடன் முதலிடத்திலும் கோலாலம்பூர் 230 வழக்குகளுடனும் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிலாங்கூரில் 200 வழக்குகளும் நெகிரி செம்பிலானில் 119 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஜோகூர் மாநிலத்தில் மட்டுமே கூடுதலாக 175 வழக்குகள் பதிவாகியுள்ளன.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் நடப்பதே இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆபத்தான முறையில் முந்திச் செல்லுதல், வழிவிட மறுத்தல், ஒலிப்பான்களை மிகையாக ஒலித்தல், சைகைகள் மூலம் வம்பிழுத்தல் போன்ற நடத்தைகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஓட்டுநர்கள் சிலர் போதை கலந்த மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதனைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்துகளில் சிக்கும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு உமிழ்நீர், சிறுநீர்ப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்படவுள்ளன.

சாலை வன்முறைகளில் ஈடுபடுவோர்மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றமிழைப்போர்க்குச் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ், ஐந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

இணையத்தில் பரவும் சாலை வன்முறைக் காணொளிகள் தொடர்பில் உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் காவல்துறை தெரிவித்தது. கண்காணிப்புப் படக்கருவிகள், வாகனப் படக்கருவிகளில் பதிவான காணொளிகள், சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

குற்றங்களைத் தடுக்கப் பொதுமக்கள் தங்களின் வாகனப் படக்கருவிப் பதிவுகளை வழங்கி ஒத்துழைக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபோக்குவரத்துவாகனம்