பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள ஒரு சாலையில் புதன்கிழமை (செப்டம்பர் 24) காலை திடீரென புதைகுழி ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில், சாம்சென் சாலையில் உள்ள வஜிரா மருத்துவமனைக்கு முன்முன்புறம் உள்ள சாலை சரிந்ததைத் தொடர்ந்து, குழாய் வெடித்து தண்ணீர் வெளியேறியதாகக் காவல்துறை தெரிவித்தது. உடனடி பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அதிகாரிகள் போக்குவரத்துக்குச் சாலையை மூடினர்.
புதன்கிழமை காலை வஜிரா சந்திப்பிலிருந்து சங்கி சந்திப்பு வரையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்துக்குச் சாலை உடனடியாக மூடப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் அறிவித்தனர்.
புதிய வஜிரா நிலைய எம்ஆர்டி ரயில் பாதை கட்டுமானத் தளத்திற்கு அருகில், வஜிரா மருத்துவமனைக்கு நேர் எதிரே இந்த விபத்து நடந்தது.
பெரும் சாலை இடிபாடுகளால் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஏறக்குறைய 30க்கு 30 மீட்டருக்கு அளவிலும் 50 மீட்டர் ஆழத்திலும் புதைகுழி ஏற்பட்டது. இது, பாதி ஒலிம்பிக் நீச்சல் குளத்தைவிட சற்றே பெரியது.
இரண்டு மின்கம்பங்களும் புதைகுழிக்குள் விழுந்தன. புதைகுழியின் விளிம்பில் சிக்கிய ஒரு ‘பிக்அப் டிரக்’ வாகனமும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது.
இந்நிலையில், பேங்காக் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபண்ட், சாலை இடிபாடுகளை ஆய்வு செய்தார். சுரங்கப்பாதைக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையிலான சந்திப்பில் நிலத்தடி சுரங்கப்பாதையில் மண் நுழைந்ததால் சாலை சரிந்ததாக அவர் விளக்கினார்.
இந்தச் சம்பவத்தால் ஒரு முக்கிய நீர்க் குழாய் சேதமடைந்தது. பேங்காக்கில் உள்ள 31 சாலைகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
இந்நிலையில், வஜிரா மருத்துவமனையில் வெளிநோயாளிச் சேவைகள் இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 3,500 நோயாளிகளுக்கு முடிந்தவரை விரைவில் மீண்டும் நேரம் ஒதுக்கித் தரப்படும் என்றும் மருத்துவமனை தெரிவித்தது.
தாய்லாந்துப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனுடின் சார்ன்விராகுல், இந்தச் சம்பவம் குறித்து அவசர விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், சாலை சரிந்ததற்கான காரணத்தைக் கண்டறிய உதவ பல்வேறு தொழில்முறை அமைப்புகளையும் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பொறியியல் நிபுணர்களின் ஒத்துழைப்பை அவர் கோரினார்.