அல்-கயிதாவின் செயல்பாடுகளுக்குக் கைகொடுத்த 50 மி. டாலர் பிணைத்தொகை

அல்-கயிதாவின் செயல்பாடுகளுக்குக் கைகொடுத்த 50 மி. டாலர் பிணைத்தொகை

2 mins read
ae50e5ec-280f-47a4-a397-5b03dfdc775c
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவிற்கு வெளியே உள்ள காட்டி எனும் முக்கிய ராணுவ முகாமில் ஏப்ரல் 25ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின்போது, மாலி நாட்டுப் படைவீரர் ஒருவர் தமது ஆயுதத்துடன் தயார் நிலையில் நிற்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: மாலியில் அல்-கயிதா அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட பிணையாளியை விடுவிப்பதற்காக வழங்கப்பட்ட ஏறத்தாழ 50 மில்லியன் அமெரிக்க டாலர் ($50 million) பிணைத்தொகையானது, அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்குக் கைகொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் அந்த அமைப்பினரின் முன்னேற்றங்களுக்கும் அக்குழுவின் உலகளாவிய வலைப்பின்னலுக்கும் நிதியளிக்க இப் பணம் உதவியதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐநா) நிபுணர்கள் தெரிவித்தனர்.

பிணைத்தொகையின் பயன்பாட்டை விவரித்துள்ள புதிய ஐநா அறிக்கை, பிணையாளியை அடையாளம் காணவோ அல்லது யார் அந்தப் பணத்தைச் செலுத்தினார்கள் என்பதையோ குறிப்பிடவில்லை.

இருப்பினும், பணம் செலுத்திய நாடு ஐக்கிய அரபுச் சிற்றரசு என்று அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மூன்று தரப்புகள் அடையாளம் கண்டுள்ளன.

சிற்றரசுக் குடிமகன் ஒருவரும் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் இருவரும் பணம் கைமாறிய பிறகு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது எவ்வாறு செய்யப்பட்டது என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை.

கடத்தல், பிணைத்தொகை ஆகியவற்றின் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த ஐக்கிய அரபுச் சிற்றரசு அதிகாரி ஒருவர், இவ்வழக்கின் விவரங்களைக் குறிப்பிடவில்லை. என்றாலும், பயங்கரவாதத்தைக் கண்டிப்பதிலும் எதிர்ப்பதிலும் தங்கள் நாடு உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.

“தொடர்புடைய அனைத்துலக, வட்டாரக் கட்டமைப்புகளில் மும்முரமாக ஈடுபடுவது, பயங்கரவாத நிதியளிப்பு ஆதாரங்களைத் துண்டிக்க முயல்வது, பயங்கரவாதச் சித்தாந்தத்தை எதிர்ப்பது ஆகியவற்றின் வழியாக ஐக்கிய அரபுச் சிற்றரசு தனது பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது,” என்று அந்த அதிகாரி கூறினார்.

ஐநா கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையின்படி, பெரும்பாலான பணம் சாஹேல் (Sahel) வட்டாரத்தில் செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்குச் சென்றது. ஆனால், ஏமன், ஈரான் அல்லது ஆப்கானிஸ்தானிலும் இந்தப் பணம் பாதிப்பை ஏற்படுத்தியதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐநா தெரிவித்தது.

இது குறித்துக் கருத்து கேட்க ஆப்பிரிக்கா, ஏமனில் உள்ள அல்-கயிதா துணை அமைப்புகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும், கருத்து கேட்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மாலி அரசாங்கமும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

விடுவிக்கப்பட்ட மற்ற இரு பிணையாளிகளும் பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பிணைத்தொகை செலுத்தப்பட்டதற்கான எந்த விவரங்களையும் அவர்கள் குறிப்பிடவில்லை. கருத்து கேட்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான், ஈரான் அரசாங்கங்கள் பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்