தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோன்புக்கால கருணை அடிப்படையில் 500 இந்தியர் உள்ளிட்ட 1,295 பேர் விடுதலை

2 mins read
3233688b-8049-429e-ab66-9e420848166c
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முஹம்மது ஸையத் அல் நஹ்யான். - படம்: எக்ஸ் தளம்

துபாய்: நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கருணை அடிப்படையில் கிட்டத்தட்ட 1,300 சிறைக்கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு சிற்றரசு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

அதற்கான உத்தரவை அதிபர் ஷேக் முஹம்மது சையத் அல் நஹ்யான் பிறப்பித்து உள்ளார்.

மொத்தம் 1,295 கைதிகளை விடுதலை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் ஏறத்தாழ 500 பேர் இந்திய நாட்டவர்கள்.

விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் ஐக்கிய அரபு சிற்றரசுகளில் ஆங்காங்கே உள்ள சீர்திருத்த மையங்களில் சிறை வைக்கப்பட்டவர்கள்.

தண்டனை விதிக்கப்பட்டதால் கைதிகளுக்கு ஏற்பட்ட நிதி சிரமங்களைத் தீர்க்கவும் அதிபர் உறுதி தெரிவித்துள்ளார்.

நோன்புக்காலத்தின்போது சிறைக் கைதிகளில் சிலரை மனிதாபிமான அடிப்படையிலும் கருணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யும் பாரம்பரியத்தை ஐக்கிய அரபு சிற்றரசுகள் நிர்வாகம் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிறது.

குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் புதிய வாழ்வைத் தொடங்க வாய்ப்பு அளிப்பது அதன் நோக்கம் என்று அந்நாட்டின் செய்தி நிறுவனமான வாம் (WAM) தெரிவித்து உள்ளது.

சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவு பிப்ரவரி இறுதிப் பகுதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவர்களை தவிர, 1,518 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக ஐக்கிய அரபு சிற்றரசுகளின் பிரதமர் ஷேக் முஹம்மது ரஷித் அல் மக்தோவ்ம் அறிவித்துள்ளார். இதனை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

துபாயில் உள்ள சீர்திருத்த, தண்டனை மையங்களில் அடைக்கப்பட்டு உள்ளவர்களுக்குப் பொது மன்னிப்பு பொருந்தும் என்றும் அந்தச் செய்தி கூறியது.

கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட நடைமுறைகளை துபாய் அரசு வழக்கறிஞர் அலுவலகமும் துபாய் காவல்துறையும் ஏற்கெனவே தொடங்கிவிட்டதை துபாய் தலைமைச் சட்ட அதிகாரி எஸ்ஸாம் இஸ்ஸா அல் ஹுமைதன் உறுதிசெய்தார்.

குறிப்புச் சொற்கள்