50,000 வடகொரிய ராணுவத்தினர் ரஷ்யாவில் உதவ நேரலாம்: உக்ரேன்

50,000 வடகொரிய ராணுவத்தினர் ரஷ்யாவில் உதவ நேரலாம்: உக்ரேன்

தென்கொரியாவுடன் உக்ரேன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்: ஸெலன்ஸ்கி
படம்: ராய்ட்டர்ஸ்

10 Aug 2026 - 12:27 am

1 mins read

கிய்யேவ்: ரஷ்யாவுக்கு உதவ அங்குள்ள போர்பகுதிகளில் வடகொரியா 50,000 ராணுவ வீரர்களைக் களமிறக்கும் சாத்தியங்கள் உள்ளதாக உக்ரேனின் அதிபர் வெலோடிமிர் ஸெலன்ஸ்கி சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) அச்சம் தெரிவித்தார்.

அதனால் உக்ரேனின் ஆகாய வெளிகளைத் தற்காக்கத் தென்கொரியா உதவ முன்வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

ஜூலை மாதம் இதேத் தகவலை அவர் பகிர்ந்தபோது அந்த எண்ணிக்கை 30,000 வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவில் தரையிறங்குவர் என்று கூறியிருந்தார்.

எங்கிருந்து அவருக்கு அத்தகவல்கள் கிடைத்தன என்பதை அவர் வெளியிடவில்லை. மேலும், வடகொரியா தயாரித்த ஏவுகணைகள் உக்ரேனில் கண்டெடுக்கப்பட்டதையும் அவர் தெரிவித்தார்.

உக்ரேனின் எந்தெந்தப் பகுதிகளில் அவை காணப்பட்டன என்பதையும் அவர் கூறவில்லை.

நவீன போர்முறைகளில் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள ரஷ்யாவின் உதவிகளை நாடுவதை சந்தேகத்து இடமின்றி வடகொரியா தொடரும். அதன்படி பலவித ஆயுதங்களைப் பெறும் உரிமங்களை அந்நாடு ரஷ்யாவிடம் பெற்றுக்கொள்ளும் என்று அதிபர் ஸெலன்ஸ்கி கருத்துரைத்தார்.

அத்தகைய ஆபத்தான செயல்பாடுகளின் காரணத்தால் உக்ரேன் பின்தங்கியுள்ள அதன் ஆகாயத் தற்காப்புத் திட்டங்களுக்கு உதவ தென்கொரியா முன்வரவேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பை திரு ஸெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

ஆளில்லா வானூர்தி ஒப்பந்தம் (ட்ரோன்) உட்பட பல ஆயுத உடன்பாடுகளில் இணைந்து செயலாற்ற உக்ரேன் தயாராக உள்ளதாகவும் அதன் அரசாங்க அதிகாரிகள் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உக்ரேன்வடகொரியாதென்கொரியாஆளில்லா வானூர்திராணுவம்போர்தாக்குதல்