ஜோகூர் பாரு: உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம் பொதுமக்களுக்குச் சுமையாக இருக்கக்கூடாது என்பதில் மலேசியாவின் ஜோகூர் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக சமூக ஆதரவுத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்த்து வருகிறது ஜோகூர் அரசாங்கம். அதேபோல் ஆதரவுத் திட்டங்களால் பொதுநிதிக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அரசாங்கம் தெளிவாக உள்ளது.
இந்நிலையில், ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி, பிகேஜே (BKJ) திட்டம்மூலம் 500,000க்கும் மேற்பட்ட ஜோகூர் மக்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
பிகேஜே திட்டம் என்பது வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் நிதித்திட்டம். இது குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் பொருளியல் ரீதியாக மோசமான நிலையில் உள்ளவர்களுக்கும் உதவும்.
மக்கள் நலனுக்காக ஜோகூர் அரசாங்கம் 24 உதவித் திட்டங்களை இவ்வாண்டுக்கான மாநில வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்திருந்தது. அதில் பிகேஜே திட்டத்திற்கு மட்டும் 216.87 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
“மக்களுக்கான உதவித்திட்டங்கள் அடிமட்ட அளவிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. ஜோகூர்வாசி ஒவ்வொருவர்க்கும் வேண்டிய உதவிகள் சரியாகச் சென்றுசேர வேண்டும். அவர்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் கடமை,” என்று திரு காஸி கூறினார்.
“உயர்ந்துவரும் செலவால் மக்கள் சிரமப்படுகின்றனர். பிகேஜே திட்டம் பல மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் சுமை குறைந்துள்ளது. உதவித் திட்டம் மேலும் விரிவடையும்,” என்று பெர்னாமா ஊடகத்திற்கு நேர்காணல் அளித்தபோது திரு காஸி தெரிவித்தார்.

