கோத்தா பாரு: மலேசியாவில் 2024 முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கையின் மூலம், வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு மொத்தம் 481,119 அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சாலைப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
‘ஒப்ஸ் பெவா’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையின்போது, தகுதிவாய்ந்த ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, காலாவதியான மோட்டார் வாகன உரிமம் வைத்திருந்தது, வாகனங்களுக்கான காப்புறுதித் திட்டம் இல்லாமல் வாகனங்களை ஓட்டியது ஆகியவை முக்கியக் குற்றங்களாகக் கண்டறியப்பட்டதாகச் சாலைப் போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் முகம்மது கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார்.
விடுக்கப்பட்ட மொத்த அழைப்பாணைகளில், 2024ஆம் ஆண்டில் 183,300 அழைப்பாணைகளும் 2025ஆம் ஆண்டில் 191,676 அழைப்பாணைகளும் 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 106,143 அழைப்பாணைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஓட்டுநர்கள் தொடர்பான பிரச்சினை என்பது வெறும் சட்ட அமலாக்கம் சார்ந்த விவகாரம் மட்டுமன்றி, உள்ளூர் முதலாளிகள் சம்பந்தப்பட்ட விவகாரமாகவும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்கள் நிறுவனச் செலவுகளைக் குறைப்பதற்காக, தகுந்த தகுதி, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் உள்ளூர் முதலாளிகளும் இதற்குப் பொறுப்பாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாகச் சாலைப் போக்குவரத்துத் துறை மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வர்த்தக வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, சில குறிப்பிட்ட வழக்குகளுக்கு அபராதம் செலுத்தித் தீர்வு காண்பதற்கு அனுமதி வழங்கப்படாமல் நேரடியாக நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.
சரக்கு வாகன உரிமம் மற்றும் பொதுச் சேவை வாகன உரிமம் போன்ற தொழில்சார் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை என்பதை திரு கிஃப்லி நினைவுறுத்தினார். அதனால் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அனைத்துத் தேவையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளனரா என்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தும் பழக்கத்தை முதலாளிகள் உடனடியாகக் கைவிட வேண்டும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் வர்த்தக வாகனங்களைப் பறிமுதல் செய்வது மற்றும் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
