இஸ்லாமாபாத்: இந்தியா கடந்த வாரம் மேற்கொண்ட ராணுவத் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை (மே 13) தெரிவித்தது.
பரம எதிரி அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சென்ற வாரம் ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் செலுத்தி தாக்குதலில் ஈடுபட்டன. ராணுவத் தளங்களைக் குறிவைத்து அவை இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்துச் சுற்றுப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள்மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 40 பேரும் படைவீரர்கள் 11 பேரும் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
தனது தரப்பில் படைவீரர்கள் ஐவரும் அப்பாவி மக்கள் 16 பேரும் கொல்லப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த சனிக்கிழமை (மே 10) சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.
பாகிஸ்தான் தாக்குதலில் இலேசான சேதமடைந்தபோதும், தனது ராணுவத் தளங்கள் தொடர்ந்து செயல்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.