ஈரானிலிருந்து 550 இந்தியர்கள் வெளியேறினர்: ஆர்மேனியாவுக்கு நன்றி

ஈரானிலிருந்து 550 இந்தியர்கள் வெளியேறினர்: ஆர்மேனியாவுக்கு நன்றி

பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ் நகரில் இருந்து திரு ஜெய்சங்கர் ஆர்மேனிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்
படம்: ராய்ட்டர்ஸ்

16 Mar 2026 - 8:14 pm

1 mins read

புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவித்த 550 இந்திய நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஆர்மேனியாவை சென்றடைந்துள்ளனர்.

நிலவழியாக அவர்கள் ஈரானில் இருந்து அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்த ஆர்மேனியாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரானின் வடமேற்குப் பகுதியில் ஆர்மேனியா அமைந்துள்ளது.

ஈரானில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கும் மற்ற நகரங்களுக்கும் இந்தியர்களை இடம்பெயரச்செய்ய இந்தியா பல ஏற்பாடுகளை ஏற்கெனவே செய்துவந்தது.

அவர்களில் மாணவர்கள், வழிபாட்டுத் தலங்களை நாடிச் சென்ற யாத்ரீகர்கள், வர்த்தகர்கள், தொழில்நிபுணர்கள், கப்பல் பணியாளர்கள் போன்றோர் அடங்குவர்.

போர் தொடர்ந்து நடக்கும் ஈரானில் உள்ள இந்தியர்கள், ஆர்மேனியாவுக்குச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பும்படி இந்திய அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்திய வெளியுறவுத் துறை பேச்சாளர் ரந்தீர் ஜெய்சுவால் தற்போது ஏறத்தாழ 9,000 இந்தியர்கள் ஈரானில் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார். அங்கிருந்து இந்தியா திரும்ப விருப்பம் உள்ளவர்கள் அசர்பைஜான், ஆர்மேனியா வழியாக நாடுதிரும்ப இந்திய அரசாங்கம் உதவி வருகிறது என்பதையும் தெரிவித்தார்.

“இதுவரை 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக இடம்பெயர வழிவகை செய்தமைக்கு ஆர்மேனிய அரசாங்கத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி,” என்று பெல்ஜியம் சென்றுள்ள திரு ஜெய்சங்கர் அந்நாட்டுத் தலைநகர் பிரசல்ஸ் நகரில் இருந்து தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்இந்தியாபாதுகாப்புஇந்தியர்கள்நிலம்பயணம்