புற்றுநோய்க் கண்டறிதல்களில் கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம்

புற்றுநோய்க் கண்டறிதல்களில் கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம்

2 mins read
1da885c9-658e-463f-850e-1d2e0656ab66
2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில், ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், அயர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட புற்றுநோய் கண்டறிதல்களில் கிட்டத்தட்ட 16 விழுக்காடு விடுபட்டிருந்தன. - படம்: அன்ஸ்பிளாஷ்

லியோன்: கொவிட்-19 பெருந்தொற்றின் முதல் ஒன்பது மாதங்களில், அதிக வருமானம் கொண்ட ஏழு நாடுகளில் கிட்டத்தட்ட 55,000 புற்றுநோய்ப் பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருந்தன. இது, பொதுமுடக்கங்களும் சுகாதார அமைப்புச் சீர்குலைவுகளும் வழக்கமான மருத்துவப் பராமரிப்பை எந்த அளவிற்குப் பாதித்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

பெருந்தொற்றுக்கு முந்தைய போக்குகளுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், அயர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கணிக்கப்பட்ட புற்றுநோய்க் கண்டறிதல்களில் ஏறக்குறைய 16 விழுக்காடு கண்டறியப்படாமல் விடுபட்டிருந்தன.

ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய்க் கண்டறிதல்களில் மிகப் பெரிய சரிவுகள் காணப்பட்டன; இது எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட 24 விழுக்காடு குறைந்தது. இதைத் தொடர்ந்து, பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஒவ்வொன்றும் 18 விழுக்காடு குறைந்தன.

நுரையீரல், கருப்பைப் புற்றுநோய்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டன என்று பிரான்சின் லியோனில் உள்ள அனைத்துலகப் புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஜூன் 1ஆம் தேதி, ‘தி லான்செட் ஆன்காலஜி’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, 18 அதிகார வரம்புகளில் உள்ள 2.6 மில்லியன் நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு, புற்றுநோய்க் கண்டறிதலில் பெருந்தொற்றின் தாக்கத்தை மதிப்பிடும் மிகப் பெரிய அனைத்துலக ஆய்வுகளில் ஒன்றாகும்.

பிரிட்டன், அயர்லாந்தைவிட நார்வே, நியூசிலாந்தில் நோய்ப் பரவல் கொஞ்சம் குறைவாகவும், குணமடைதல் வேகமாகவும் இருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது, சுகாதார அமைப்பின் மீள்திறனும், பரிசோதனை மற்றும் நோயறிதல் சேவைகளின் தொடர்ச்சியும் முக்கியப் பங்கு வகித்தன என்பதைக் காட்டுகிறது.

எதிர்காலப் பொதுச் சுகாதார அவசரநிலைகளின்போது புற்றுநோய் சிகிச்சை அமைப்புகளை மேலும் மீள்திறன் கொண்டதாக மாற்ற விரும்பும் அரசாங்கங்களுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் படிப்பினைகளை வழங்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

“கொவிட்-19 பெருந்தொற்றின் அழுத்தங்களைச் சில சுகாதார அமைப்புகள் ஏன் சிறப்பாகத் தாங்கின என்பது குறித்த மேலும் விரிவான புரிதல், எதிர்கால நெருக்கடித் தயார்நிலைக்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்கக்கூடும்,” என்று அந்த அமைப்பின் புற்றுநோய்க் கண்காணிப்புப் பிரிவின் துணைத் தலைவரும் இந்த ஆய்வின் மூத்த ஆசிரியருமான இசபெல் சோயர்ஜோமடாரம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
புற்றுநோய்மீள்திறன்டென்மார்க்