மலேசியாவில் டெங்கி பாதிப்பு 56% அதிகரிப்பு

2026ல் 55 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் டெங்கி பாதிப்பு 56% அதிகரிப்பு

2 mins read
fff8bc65-89ac-4047-8a90-a84251bad7c2
கோலாலம்பூர் நகர மன்றத்தின், நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுப் பிரிவு குடியிருப்புப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்களை அழிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

பெடாலிங் ஜெயா: மலேசியாவில் டெங்கித் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 58,079 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது. 55 பேர் உயிரிழந்தனர்.

தொற்று எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 56.2 விழுக்காடு அதிகம் என்பதால் நாட்டின் டெங்கி நிலைமை கவலையளிப்பதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில் கிள்ளான், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவல் அதிகரித்துள்ளது.

பெர்லிஸில் 207 விழுக்காடு, ஜோகூரில் 109 விழுக்காடு, கோலாலம்பூர்-புத்ராஜெயாவில் 106 விழுக்காடு, பாதிப்பு அதிகரித்துள்ளது. சிலாங்கூரில் 25,090 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

பினாங்கு, மலாக்கா, கெடா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாதிப்பு சரிவைக் கண்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளிலும், சுற்றியுள்ள இடங்களிலும் தேங்கும் நீரே ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாக முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவை குடியிருப்புப் பகுதிகளிலேயே தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன என்று அமைச்சு தெரிவித்தது.

வீட்டுப் பகுதிகளில் டெங்கி உற்பத்தியாகும் இடங்களை அழிக்கப் பொதுமக்கள் வாரத்திற்கு 10 நிமிடங்கள் ஒதுக்கித் தங்கள் இல்லங்களைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசு, தனியார் துறை அமைப்புகள், வளாக நிர்வாக அமைப்புகள், சமூகக் குழுக்கள், தனிமனிதர்கள் அனைவரும் தங்களது பொறுப்பில் உள்ள பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாடெங்கிடெங்கிக் காய்ச்சல்தொற்றுஅதிகரிப்புபரவல்